இன்று டி.எம். கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி: தில்லி அரசு ஏற்பாடு

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்குள் நடைபெறவிருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்குள் நடைபெறவிருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதையடுத்து, 
தில்லி அரசு சார்பில் தில்லி கார்டன் ஆஃப் ஃபைசென்ஸசில் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்படுகிறது. இந்தத் தகவலை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். 
இது குறித்து அவர் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளதாவது:  கலை நிகழ்ச்சியை நடத்தும் எந்தவொரு கலைஞருக்கும் அனுமதி மறுக்கக் கூடாது. தில்லி மக்களுக்காக நவம்பர் 17-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு டி.எம். கிருஷ்ணாவை அழைத்துள்ளேன். கலை மற்றும் கலைஞர்களின் கண்ணியத்தைக் காப்பது மிகவும் முக்கியம் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதே விவகாரம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அதில், உள்ளடக்கிய இந்தியாவில் நம்பிக்கை இருந்தால், அந்த இந்தியா அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும், சாதியினருக்கும் ஆனது. நமது இந்தியாவைப் பிரித்து, அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு விடுக்கும் செய்தியாக (டி.எம். கிருஷ்ணாவில் இசை நிகழ்ச்சி) உங்கள் வருகை அமைய வேண்டும். அனைவருக்கும் மனப்பூர்வமான அழைப்புகள் எனத் தெரிவித்துள்ளார். தில்லியில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (ஏஏஐ) ஆதரவில் தில்லி நேரு பூங்காவில் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறவிருந்த டி.எம். கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான பிரசாரத்தால் ரத்துச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான இந்திய சாஸ்திரிய இசை, கலாசாரத்தை இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்தும் சங்கத்தின் (ஸ்பிக் -மேக்கே) ராஷ்மி மாலிக் கூறுகையில், 'இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்குள் நிகழ்ந்த சில மாற்றங்கள் காரணமாக டி.எம். கிருஷ்ணாவின் நிகழ்ச்சி தள்ளிபோட வேண்டியதாகிவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ரத்து செய்யப்படவில்லை. டி.எம். கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியை வேறொரு நாளில் நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தேதியை ஏஏஐயிடம் தெரிவிப்போம்' என்றார். 
இதனிடையே, கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவும் தில்லியில் சனிக்கிழமை நிகழ்த்தவுள்ள இசை நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழை சுட்டுரையில் பகிர்ந்து, விழாவில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com