"நிகழாண்டில் பயிர்க் கழிவுகள் எரிப்புச் சம்பவங்கள் அதிகம்'

தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் கடந்த ஆண்டுடன்

தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது .
தில்லியில் கடந்த 10 நாள்களாகவே சுற்றுச்சூழல் மாசு கடுமையாக இருந்தது. குறிப்பாக, தீபாவளிக்கு பிறகு தில்லியில் காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு கடுமையான பிரிவிலும், மிகவும் மோசமான பிரிவிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப் போன்றவற்றில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை அதிக அளவில் எரிப்பதால் ஏற்படும் மாசு, வாகனப் புகை, நிலக்கரி மற்றும் உயிரி எரிவாயு மூலம் செயல்படும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவை இதற்குக் காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில், தில்லியின் அண்டை மாநிலங்களில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் பயிர்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் புரே லால் தெரிவித்துள்ளார். 
'நீடித்த பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கான பயிர் கழிவுகள் அதிக பயன்பாடு' எனும் தலைப்பில் தில்லியில் பிஎச்டி சேம்பர் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இத்தகவலைக் குறிப்பிட்டார்.
பயிலரங்கில் அவர் மேலும் பேசியதாவது: தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் நிகழ்வுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு அதிக அளவில் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பயிர்க் கழிவுகளை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நீடித்த வளர்ச்சிக்காக அதிக அளவில் பயன்படுத்த முடியு ம். வைக்கோல் ஆனது செறிந்த உரத்திற்கான வளமாகும். இந்த வைக்கோலை மண்ணுடன் கலக்கச் செய்வது நல்ல பயன்பாட்டை அளிக்கவல்லது. தலைநகர் தில்லியில் மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில் இளம் தலைமுறையினர் மாற்றத்திற்கு தயாராகவே உள்ளதாகக் கூறப்படுகிறது . ஆனால், மூத்த தலைமுறையினர் இன்னும் பயிர்க் கழிவுகளை எரிப்பதிலேயே ஈடுபட்டு வருகின்றனர். நெற்பயிர் வைக்கோல் கழிவுகள் முற்றிலும் மக்குவதற்கு 45 நாள்கள் ஆகின்றன. அதன்பிறகு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், விவசாயிகள் வெறும் 25 நாள்களில் இந்தப் பணியை செய்கின்றனர். இதனால், பயிர்க் கழிவுகள் மக்குவதற்கான காலத்தை 45 நாள்களிலிருந்து 25 நாள்களாகக் குறைப்பதில் நாம் வெற்றி பெற்றால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இந்த விஷயத்திற்காக மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சுவாசிப்பதற்கே பிரச்சினையாகும் சூழல் உருவாகிவிடும் என்றார் அவர்.
இது தொடர்பாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புரே லால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், தில்லியில் மாசு அளவு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தவும் அல்லது சிஎன்ஜி அல்லாத தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கவும் வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். 
இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் ஆணையர் வி. என். காலே பேசுகையில், 'கடந்த ஆண்டில் மொத்தம் 20 மில்லியன் டன் நெற்பயிர் வைக்கோல் கழிவில் 17 மில்லியன் டன் எரிக்கப்பட்டன. நிகழாண்டில் இதுவரை 13 முதல் 15 மில்லியன் டன் வைக்கோல் கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com