தில்லியில் டெங்கு தீவிரம்: ஒரே வாரத்தில் 500 பேர் பாதிப்பு

தலைநகர் தில்லியில் டெங்கு அதி தீவிரமாகப் பரவி வருகிறது. அதே சமயம், மலேரியாவின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.

தலைநகர் தில்லியில் டெங்கு அதி தீவிரமாகப் பரவி வருகிறது. அதே சமயம், மலேரியாவின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 500 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் அனைத்துப் பிரிவுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தில்லியைப் பொருத்தவரை கொசுக்கள் மூலம் பரவக் கூடிய நோய்களின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கும். ஆனால், நிகழாண்டில் டெங்குவின் தாக்கம் ஜனவரியிலேயே தொடங்கிவிட்டது. ஜனவரியில் 6 பேர், பிப்ரவரியில் 3 பேர், மார்ச்சில் ஒருவர், ஏப்ரலில் இருவர், மே மாதத்தில் 10 பேர், ஜூனில் 8 பேர், ஜூலையில் 19 பேர், ஆகஸ்டில் 58 பேர் எனப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், செப்டம்பரில் இருந்து தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்தது. இதையடுத்து, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை செப்டம்பரில் 374 பேர், அக்டோபரில் 1, 114 பேர் என இருந்தது. இந்நிலையில், டெங்கு நோயால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 
தில்லியில் செப்டம்பர் மாதத்தில் இருந்து டெங்கு நோயின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தில்லியில் டெங்கு நோயால் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று கொசுப் பெருக்கம் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 1 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கொசுப் பெருக்கத்தை தடுக்கத் தவறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு மருந்துகள் தினம்தோறும் தெளிக்கப்படுகின்றன. மாநகராட்சி மலேரியா தடுப்பு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கின்றனர். மேலும், தில்லியில் கொசுக்களால் பரவும் நோய்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயல்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் கூறும் அளவைவிட தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: 
மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை வைத்து மாநகராட்சி சார்பில் அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஆனால், டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும், பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 
இந்த எண்ணிக்கை மாநகராட்சி அறிக்கையில் இடம் பெறவில்லை. இதன்படி பார்த்தால் தில்லியில் டெங்கு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றனர்.

மலேரியாவின் தாக்கம் குறைந்தது
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதி வேகமாகப் பரவி வந்த மலேரியாவின் தாக்கம் நவம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இதுவரை 12 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தில்லியைப் பொருத்தவரை மலேரியாவின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் தொடங்கும். ஆனால், நிகழாண்டில் பிப்ரவரியிலேயே தொடங்கிவிட்டது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மலேரியாவின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், மே மாதத்தில் 17 பேர், ஜூனில் 25 பேர், ஜூலையில் 42 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்டில் இருந்து மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்தது. அந்த மாதத்தில் 82 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முறையே 138, 130 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் தில்லியில் மலேரியா நோயின் தாக்கம் குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இதுவரை 12 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு தில்லி, வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது' என்றனர்.

டெங்கு பாதிப்பு
மே      -     10
ஜூன்     -     8
ஜூலை     -     19
ஆகஸ்ட்     -     58
செப்டம்பர்     -     374
அக்டோபர்     -     1, 114
கடந்த ஒரு வாரம்     -     500


மலேரியா பாதிப்பு
மே     -    17
ஜூன்     -     25
ஜூலை     -     42
ஆகஸ்ட்     -     82
செப்டம்பர்     -     138
அக்டோபர்     -     130
நவம்பர்     -     12
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com