புதுச்சேரி 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் நியமனம் செய்யப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் நியமனம் செய்யப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி கடந்த மார்ச் 22-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், "யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையிலும், துணைநிலை ஆளுநருக்கு நியமன எம்எல்ஏக்களைத் தன்னிச்சையாக நியமிக்க அதிகாரம் உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
மேலும், அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்துச் செய்யப்பட்டதுடன், இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை நியமனம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களைச் செயல்படவும், பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிப்பார் என எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார்.
 இதைத் தொடர்ந்து, நியமன எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி, "யூனியன் பிரதேசம் என்றால் மத்திய அரசின் ஆளுகைப் பகுதி என்று பொருள். மத்திய அரசின் ஆளுகைப் பகுதியை குடியரசுத் தலைவர் ஒரு நிர்வாகியைக் கொண்டு நிர்வகிக்கிறார். அரசியல் அமைப்புச்சட்டம் 239 (ஏ) பிரிவில் யூனியன் பிரதேசத்தின் நியமன உறுப்பினர்கள் குறித்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 
இதேபோல நியமன உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து அரசியல் அமைப்புச் சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது' என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மனுதாரர்களின் கோரிக்கை நியமன உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அல்ல' என்றனர். இதைத் தொடர்ந்து, ரஞ்சித் குமார் தொடர்ந்து வாதிடுகையில், "சட்டப்பேரவை தொடர்பாக உள்ள எவ்வித விதிமுறைகளிலும் நியமன உறுப்பினர்களின் நியமனம் குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. தொடர்ச்சியான சீரான நடைமுறைகள் என்பது சட்டமாகாது' என்றார்.
இதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, "நியமன உறுப்பினர்கள் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து தர்க்கம் செய்யவில்லை. மாறாக நடைமுறைகள் குறித்தே கேள்வி எழுப்பி வருகிறோம். சூழலைக் கருத்தில் கொண்டு நடைமுறை கூட்டாட்சித் தத்துவத்தை தொடர்ந்து விரிவுப்படுத்த வேண்டும்' என்றார். 
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com