போலி ஆவணம் மூலம் பல்கலை.யில் சேர்க்கை: டி.யு. மாணவர் சங்கத்தின் புதிய தலைவர் மீது என்எஸ்யுஐ புகார்

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் (டியுஎஸ்யு) தலைவர் அன்கிவ் பசோயா போலியான ஆவணங்களைக் கொடுத்து

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் (டியுஎஸ்யு) தலைவர் அன்கிவ் பசோயா போலியான ஆவணங்களைக் கொடுத்து பல்கலை.யில் சேர்ந்துள்ளதாக இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) குற்றம் சாட்டியுள்ளது. 
தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியது.
ஏபிவிபியின் அன்கிவ் பசோயா 1,744 வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதித்துப் போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளர் சன்னி சில்லரை தோற்கடித்து தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் தில்லி பல்கலைக் கழகத்தில் புத்தமதம் தொடர்பான கல்வியில் எம்ஏ படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், டியுஎஸ்யு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்கிவ் பசோயா போலி ஆவணம் கொடுத்து பல்கலை.யில் சேர்ந்துள்ளதாக என்எஸ்யுஐ புகார் தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக என்எஸ்யுஐ தேசிய செயலர் சைமன் ஃபாரூக் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபியினர் மோசடியான முறையில் வெற்றி பெற்றுள்ளனர். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏபிவிபியின் அன்கிவ் பசோயா தனது பிஏ படிப்பை தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலை.யில் முடித்துள்ளதாக போலியான ஆவணம் கொடுத்துள்ளார். இந்த ஆவணங்கள் தொடர்பாக திருவள்ளூர் பல்கலை.யைத் தொடர்பு கொண்டு என்எஸ்யுஐ நிர்வாகிகள் கேட்ட போது, அன்கிவ் பசோயா என்ற பெயரில் யாரும் அங்கே கற்கவில்லை என்றும் அவர் கல்வி கற்றதாக சமர்பிக்கப்பட்ட ஆவணம் போலியானது என்றும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தில்லி பல்கலை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ஏபிவிபி மறுப்பு
என்எஸ்யுஐயின் குற்றச்சாட்டை ஏபிவிபியினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக தில்லி பிரதேச ஏபிவிபி தலைவர் அஷ்தோஷ் சிங் கூறியதாவது:
அன்கிவ் பசோயா அளித்த ஆவணங்களை உரிய முறையில் தில்லி பல்கலை. பரிசீலித்தே பல்கலை.யில் சேரஅனுமதி அளித்துள்ளது. போலியான ஆவணங்களைக் கொடுத்து தில்லி பல்கலை. போன்ற உயர் பல்கலைக் கழகங்களில் அனுமதி பெற முடியாது. மாணவர் சங்கத் தேர்தலில் தோற்றுப் போன விரக்தியில் என்எஸ்யுஐயினர் அபாண்டமாகப் பழி சுமத்துகின்றனர் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com