ஜாதி மறுப்பு திருமணத்தை ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிரானதல்ல; அது திருமணம் செய்து கொள்ளும் ஆண் - பெண்

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிரானதல்ல; அது திருமணம் செய்து கொள்ளும் ஆண் - பெண் இடையேயுள்ள இணக்கத்தை பொறுத்தது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் புதன்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் கடந்த 3 நாள்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பின் போது,  அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்திடம், கலப்புத் திருமணம், கல்வி, ஓரினச் சேர்க்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து  செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
கலப்புத் திருமணத்தை ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினால், அதில் பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களே இருப்பர். நாட்டிற்கு புதிய கல்விக் கொள்கை தேவை. பாரம்பரிய கல்வியுடன் இணைந்த நவீன கல்விக் கொள்கை தேவை.
ராமர் கோயில்: ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும். அது குறித்த முடிவை ராமர் கோயில் சமிதி அமைப்பு தான் எடுக்க வேண்டும். கட்டுமான பணிக்காக அவர்கள் தான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ராமர் கோயில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நான் அரசின்அங்கம் இல்லை. அது குறித்து எனக்கு தெரியாது.
ஆங்கில மொழி: ஆங்கிலம் உள்பட எந்த மொழியையும் ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை. எந்த மொழியும் இந்திய மொழிகளின் இடத்தை பிடிக்க முடியாது. ஒரு மொழி அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு நாங்கள் எதிரிகள் இல்லை. திறமையாக ஆங்கிலம் பேசுபவர்கள் நமக்கு தேவை.
பசு பாதுகாப்பு:  பசு பாதுகாப்பை வலியுறுத்துகிறோம். ஆனால் அதற்காக வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. பசு பாதுகாப்பு என்ற பெயரில், சட்டத்தை ஒருவர் கையில் எடுத்துக் கொள்வது குற்றமாகும். இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு: பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆண்கள், பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
ஓரினச்சேர்க்கையாளர்கள்: ஓரினச் சேர்க்கை சமூகத்தினரை தனிமைப் படுத்தக் கூடாது. அவர்களும் நமது சமூகத்தின் ஓர் அங்கம். அதே வேளையில், ஓரினச் சேர்க்கை உரிமை மட்டுமே விவாதிக்க வேண்டிய பிரச்னை அல்ல. காலம் மாறி வருகிறது. இந்த பிரச்னை குறித்து சமூகம் முடிவெடுக்க வேண்டும்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு விதிகள் 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த மாநிலத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். ஹிந்துத்துவத்துக்கு எதிரான மனப்பான்மை அங்கு நிலவவில்லை. உலகம் முழுவதும் ஹிந்துத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை நிலவி வருகிறது என்று மோகன் பாகவத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com