ரோஹிணியில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட  50 வயது பெண்ணை மீட்டது மகளிர் ஆணையம்!

தில்லி ரோஹிணியில் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட 50 வயது பெண்ணை தில்லி மகளிர் ஆணையம் மீட்டது.

தில்லி ரோஹிணியில் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட 50 வயது பெண்ணை தில்லி மகளிர் ஆணையம் மீட்டது. அவரை அவரது சகோதரர் இரு ஆண்டுகளாக வீட்டில் அடைத்துவைத்திருந்ததாக தில்லி மகளிர் ஆணையத்தினர் தெரிவித்தனர்.
ரோஹிணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 50 வயது பெண் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தில்லி மகளிர் ஆணையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஆணையத்தின் ஆலோசகர்கள் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அடைத்துவைக்கப்பட்ட பெண்ணை மீட்க நடவடிக்கை எடுத்தது. இக்குழுவுடன் காவல் துறையினரும் அழைத்துச் செல்லப்பட்டனர். 
பக்கத்துவீட்டின் கூரையின் மீது ஏறி பார்த்த போது, சம்பந்தப்பட்ட வீட்டின் மாடியில் அப்பெண் அலங்கோல நிலையில் இருந்தது தெரிய வந்தது. 
இதையடுத்து, அவரை மீட்டு ரோஹிணியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் மகளிர் ஆணையத்தின் ஆலோசகர்கள் குழு அனுமதித்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணை தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்தார். அப்போது, அப்பெண்ணை நடத்திய விதம் தனக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகக் கூறிய ஸ்வாதி மாலிவால், இந்த விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட பெண் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ள விதம் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவருக்கு 50 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் அவர் பார்ப்பதற்கு 90 வயது போல் காணப்படுகிறது. அவர் மிகவும் பட்டினியால் வாடியுள்ளார். அவரது அடிப்படைத் தேவைகளைக்கூட அவர் நிவர்த்தி செய்ய முடியவில்லை. 
கடந்த பல நாள்களாக திறந்தவெளி மாடியில் இழிவான நிலையில் அவர் கிடந்துள்ளார். அவரது நிலைக்குக் காரணமாக உள்ள அவரது சகோதரரும், சகோதரரின் மனைவியும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். 
அவரது நிலைமை குறித்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் போலீஸாருக்கோ, தில்லி மகளிர் ஆணையத்திற்கே தகவல் தெரிவிக்க நினைக்காதது மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். இதுபோன்ற சம்பவங்களை வெளிக்கொணர எல்லோரும் முன்வர வேண்டும். அப்போதுதான் பெண் குழந்தைகளும், பெண்களும் பாதுகாக்கப்பட முடியும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com