விடுமுறை பயணச் சலுகை:  மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியீடு

விடுமுறை பயணச் சலுகைத் திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு

விடுமுறை பயணச் சலுகைத் திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 48.41 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், விடுமுறை பயணச் சலுகைத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கொரு முறை வெளியிடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவதுடன், பயணச் செலவுக்கான தொகையும் திருப்பித் தரப்படும்.
எனினும், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு இச்சலுகைத் திட்டத்தின் மத்திய அரசு ஊழியர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு தளர்த்தியது.
அதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் விமானத்தில் பயணிப்பதற்கான சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 
இதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் ஆண்டு, இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டது. அப்போது, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி வரை, அந்தச் சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தச் சலுகை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. மேலும், இதுதொடர்பான உத்தரவை, அனைத்து துறைகளின் செயலர்களுக்கும் அந்த அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. 
இதனிடையே, விடுமுறை பயணச் சலுகைத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com