தலைநகரில் ரூ.25 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது!: வெளிநாட்டவர் மூவர் கைது

தெற்கு தில்லியில் ரூ.25 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளுடன் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரும்,


தெற்கு தில்லியில் ரூ.25 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளுடன் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரும், நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு துணை ஆணையர் பி.எஸ்.குஷ்வாஹா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எஸ்மத்துல்லா (40), கலீலுல்லா (22) ஆகிய இருவர், தெற்கு தில்லியின் சாகேத் பகுதியில் நைஜீரியர் ஒருவரிடம் போதைப் பொருளை விநியோகிப்பதற்காக வரவிருப்பது குறித்த ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து, சாகேத் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஹெராயின் போதைப் பொருளை விநியோகிப்பதற்காக வந்த இருவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து போதைப் பொருளை பெறுவதற்காக வந்த ஓசோண்டு என்ற நைஜீரியரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.25 கோடியாகும்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. எஸ்மத்துல்லா, கலீலுல்லா ஆகிய இருவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயினை கடத்தி வந்து, தில்லியில் வசிக்கும் நைஜீரியர்களிடம் விற்று வந்துள்ளனர். இந்த நைஜீரியர்கள், இதர நாடுகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் ஹெராயினை அனுப்பியுள்ளனர்.
மேற்கண்ட இருவரும் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 100 கிலோ எடையுள்ள ஹெராயினை தில்லிக்கு விமானம் மூலம் கடத்தி வந்துள்ளனர். கடந்த முறை 15 கிலோ எடையுள்ள ஹெராயினை கடத்தி வந்துள்ளனர். ஹெராயின் அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளை விழுங்கியும், தங்களது உடைமைகளில் மறைத்தும் கடத்தியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் மருத்துவ விசா மூலம் தில்லிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
நைஜீரியர் ஓசோண்டு, கடந்த 2014-ஆம் ஆண்டில் 6 மாத கால தொழில் விசா மூலம் இந்தியா வந்துள்ளார். ஆனால், விசா காலம் முடிந்த பிறகு அவர் தாய்நாடு திரும்பவில்லை. சட்டவிரோதமாக இந்தியாவிலேயே தங்கிய அவர், மற்ற நைஜீரியர்களுடன் சேர்ந்து ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள், தில்லி மற்றும் அண்டை மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் போதைப் பொருளை விநியோகித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் பி.எஸ்.குஷ்வாஹா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com