சிக்னேச்சர் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபரில் தயாராகும்: மணீஷ் சிசோடியா தகவல்

தில்லியில் கட்டப்பட்டு வரும் சிக்னேச்சர் பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் எ


தில்லியில் கட்டப்பட்டு வரும் சிக்னேச்சர் பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.
வடகிழக்கு தில்லியையும், காஜியாபாதையும், அதனையொட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில் யமுனை ஆற்றின் குறுக்கே வாஜிராபாத் பகுதியில் தில்லி சுற்றுலா, போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனத்தால் (டிடிடிடிசி) சிக்னேச்சர் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
2004-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்பாலத் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை 2007-இல் ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பே 2010, அக்டோபரில் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
ஆனால், இத்திட்டத்துக்கு 2011-இல்தான் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. இதையடுத்து, 2013 இறுதியில் முடிக்கத் திட்டமிடப்பட்டது.
அதன்பிறகு, 2016, ஜூனில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் நடைபெறாததால், 2017 ஜூலையில் முடிக்கப்படும் என்றும், பின்னர் 2017 டிசம்பரில் முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதலில் ரூ. 1,131 கோடி மதிப்பீட்டில் சிக்னேச்சர் பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான காலக்கெடு நீடித்துக் கொண்டே சென்றதால், திட்டத்தின் மதிப்பீடு செலவும் அதிகரித்தது. இத்திட்டத்துக்கான மறு மதிப்பீட்டின்படி சுமார் ரூ.1,344 கோடியை தில்லி அரசு இதுவரை செலவிட்டுள்ளது. எனினும், இத்திட்டத்திற்கான செலவு அவ்வப்போது அதிகரித்தது.
இந்நிலையில், டிடிடிடிசி நிர்ணயித்த மறு மதிப்பீட்டு செலவுத் தொகையான ரூ. 1,575 கோடியை வழங்கலாம் என்று மத்திய பொதுப்பணித் துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதனிடையே, சிக்னேச்சர் பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிக்னேச்சர் பாலம் கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சிக்னேச்சர் பாலம் கட்டுமானப் பணிகளை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சிக்னேச்சர் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தயாராகிவிடும் என்றார்.
முன்னதாக, சிக்னேச்சர் பாலத்தில் 154 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தை பொருத்தும் பணி அண்மையில் நடைபெற்றது.
இப்பணியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கடந்த மே 29-இல் நேரில் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com