பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்: குடியரசுத் தலைவர் அழைப்பு

பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு


பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபாவின் நூற்றாண்டு விழாவை தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
மொழிகள்தான் மக்களை இணைக்கும் பாலங்களாக உள்ளன. நமது நாட்டில் எண்ணற்ற மொழிகளும், வட்டார கிளை மொழிகளும் பேசப்படுகின்றன. அனைத்து மொழிகளுக்கும் அவற்றுக்கென அழகியல் தன்மையும், சிறப்புக் கூறுகளும் உள்ளன. இத்தகைய மொழிகள்தான் இந்தியப் பண்பாட்டையும் உருவாக்குகின்றன.
இதுபோன்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபாவை மகாத்மா காந்தி நிறுவினார்.
வார்தாவில் காந்திஜி 1945-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், வட இந்தியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் தென்னிந்திய மொழிகளைப் பயில வேண்டும் என வலியுறுத்தினார். தான் வலியுறுத்தியதைப்போல தமிழ் மொழியையும் பயிலத் தொடங்கியதாக தனது வாழ்க்கை வரலாற்றில் காந்தியடிகள் பதிவு செய்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா போன்றவை முக்கியப் பங்கு ஆற்றி வருகின்றன.
ஒவ்வொரு இந்தியரும், அவரது தாய்மொழியைத் தவிர்த்து பிற இந்திய மொழிகளையும் கற்க வேண்டும். ஹிந்தி பேசும் இளையோர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளைப் பயிலும் போது, அந்த மொழியின் வளமான மரபு அறிமுகமாகும். இதுபோன்ற மொழியறிவு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும்.
சென்னையில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா இருப்பது போல, கேரளத்தில் தமிழ் பிரசார சபா, உத்தரப் பிரதேசத்தில் கன்னட பிரசார சபா போன்றவற்றை உருவாக்கி, பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபாவின் வேந்தரும், அதன் தலைவருமான ஓய்வுபெற்ற நீதிபதி சிவ்ராஜ் வி.பாட்டீல் தனது வரவேற்புரையில், ஓர் ஆசிரியர், 5 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா, தற்போது 20 ஆயிரம் ஆசிரியர்களுடன் 2 கோடி மாணவர்களைக் கொண்டு ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் என ஆலமரம் போல கிளைவிட்டு வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.
இந்த விழாவில் சபாவின் துணைவேந்தர் ஆர்.எஃப். நீர்லகட்டி, இரண்டாவது துணைத் தலைவர் சொக்கலிங்கம், கல்விக் குழுவின் தலைவர் எஸ்.பார்த்தசாரதி, தனி அதிகாரி கே. தீனபந்து, பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், பொருளாளர் சி.என்.வி.அண்ணாமலை, விழாக் குழு செயலர் பாண்டுரங்க ராவ், சபாவின் திருச்சி செயலர் எம்.ஜி. குத்தல், செயற்குழு உறுப்பினர்கள் பி.சின்னையன், எஸ். அருணாசலம் உள்பட தென் மாநிலங்களிலிருந்து சுமார் 750 பேர் கலந்து கொண்டனர். தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபாவின் துணைத் தலைவர் ஹனுமந்தப்பா நன்றியுரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com