ரஃபேல் விவகாரம் : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு வலியுறுத்தல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
இதனிடையே, ரஃபேல் விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள், இப்பிரச்னையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் பதவி விலக வேண்டும்: ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தத்தால் நாட்டுக்கு சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுபாப்பு விஷயத்தில் மோடி அரசு விளையாடக் கூடாது. ரஃபேல் ஒப்பந்த விவகாரம் நாட்டில் பல மாதங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ள கருத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
பிரதமராக உள்ள நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல், அம்பானி குடும்பத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறார். இந்த விவகாரத்தில் பிரதமருக்கு ஆம் ஆத்மி கட்சி சில கேள்விகளை முன்வைக்கிறது. ரஃபேல் விமானத்தின் விலை ரூ. 570 கோடியிலிருந்து ரூ. 1,670 கோடியாக உயர்ந்தது எப்படி? ஒப்பந்தத்தில் ரகசிய ஷரத்து சேர்க்கப்பட்டது ஏன்? ரஃபேல் விமானத்துக்கு ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விலையிலிருந்து மூன்று மடங்கு அதிகமான விலையை பிரதமர் அறிவித்தது ஏன்? புதிதாக உருவாக்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனம், எதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தப்பட்டது? இக்கேள்விகளுக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், ரஃபேல் விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்றார் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com