மொஹல்லா கிளினிக் திட்டத்துக்கு வாடகையில்லா இடம் வழங்க வேண்டும்: தில்லிவாசிகளுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

'ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்' அமைப்பதற்காக தில்லி அரசுக்கு வாடகையில்லா நிலம் அல்லது வீடுகளை

'ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்' அமைப்பதற்காக தில்லி அரசுக்கு வாடகையில்லா நிலம் அல்லது வீடுகளை வழங்குமாறு தில்லிவாசிகளுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அச்சு விளம்பரத்தில், "உங்கள் அரசுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. ஒரு நல்ல திட்டத்திற்காக நீங்கள் பங்குதாரர் ஆகுங்கள்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
அந்த விளம்பரத்தில் "ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக் அமைப்பதற்காக நீங்கள் உங்கள் காலி வீட்டையோ அல்லது நிலத்தையோ தில்லி அரசுக்கு வாடகையில்லாமல் வழங்க முடியுமா?  ஒரு குழுவாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இடத்தையோ அல்லது வீட்டையோ வாடகையில்லாமல் மொஹல்லா கிளினிக் அமைக்கத் தர முடியுமா? 
கடவுளின் அருளால் நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ போதிய நிதி ஆதாரங்களைக் கொண்டிருந்தால் தில்லியில் சில இடங்களை வாடகைக்கு வாங்கி மொஹல்லா கிளினிக் அமைப்பதற்காக  தில்லி அரசுக்கு வாடகை இல்லாமல் தர முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு "ஆம்' என்று பதில் இருந்தால், அப்பகுதியில் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதற்கான மொஹல்லா கிளினிக்குகளை தில்லி அரசு அமைக்கும்' என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகையில்லா வீட்டுக்கான காலம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளும்,  வாடகையில்லா நிலத்திற்கான காலம் 10 ஆண்டுகளாகவும் இருக்கும்.
இது தொடர்பாக முதல்வர் கேஜரிவால் தன்னுடைய சுட்டுரைப் பதிவில், "உன்னத நோக்கத்திற்காக பங்குதாரர் ஆகுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  தில்லியில் ஆயிரம் மொஹல்லா கிளினிக்குகளை அமைக்க உள்ளதாக அவர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "நாங்கள் தில்லியில் ஆட்சிக்கு வந்த உடனேயே,  முதல் 6 மாதங்களில் 150 மொஹல்லா கிளினிக்குகளை அமைத்தோம்.  இது பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இதுபோன்று ஆயிரம் கிளினிக்குகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.  இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 இது தொடர்பான கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  
அது 3 ஆண்டுகளாக அது அப்படியே இருந்தது. தற்போது ஆறு மாதங்களுக்குள்  தில்லியில் 1,000 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு காலனியிலும், ஒவ்வொரு செக்டரிலும் கிளினிக் அமைக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com