தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மக்களிடம் பிரசாரம்: ஆம் ஆத்மி முடிவு

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்காத காரணத்தால் மக்கள் நீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கையை வைக்க உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், தில்லி தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கோபால் ராய் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: 
கடந்த நான்கு ஆண்டுகளாக தில்லி மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு மத்திய அரசு தடைகளை ஏற்படுத்தியது. அந்தத் தடைகளைத் தீர்க்க பல்வேறு வழிகளில் தில்லி அரசு முயன்றும் பலன் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றத்துக்கே சென்றோம். ஆனால், அங்கும் நீதி கிடைக்கவில்லை. ஆகையால், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி தில்லி மக்கள் மத்தியிலேயே பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தப் பிரசாரம் குறித்த திட்டங்களை வகுப்பதற்காக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் கூட்டம் வருகிற 23ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி கூட்டியுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்கள் நீதிமன்றம்தான் அனைத்து நீதிமன்றங்களை விட பெரியதாகும். ஆகையால், மக்களிடமே சென்று பிரசாரம் செய்து, தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோருவதற்கு முடிவு செய்துள்ளோம் என்றார்.
தில்லி அதிகார மோதல் வழக்கில் கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில், அரசு வழக்குரைஞர்களை தில்லி அரசு நியமிக்கலாம், நில வருவாய் மதிப்பீட்டை நிர்ணயிக்கலாம் என்றும் மத்திய அரசு ஊழியர்களை தில்லி ஊழல் தடுப்புப் பிரிவு விசாரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
மேலும், தில்லி அரசு அதிகாரிகள் நியமன விவகாரத்தில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்தனர். இதனால் இந்த விவகாரம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகள் தில்லி அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் இதனால் தில்லி அரசின் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்றும் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com