ரூ.24 கோடி ஹெராயின் பறிமுதல்: இருவர் கைது 

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் தில்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டன.


சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் தில்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருள் வைத்திருந்த இருவர் பச்சிம் விஹாரில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். அவர்கள் பன்னாலால் (எ) வினோத், நைஜீரீயா நாட்டைச் சேர்ந்த எம்மா என்று அடையாளம் காணப்பட்டது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் இருவரிடமும் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் எம்மாவிடம் 4 கிலோ ஹெராயினும், பன்னாலாலிடம் 2 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. இருவரிடம் இருந்தும் இரண்டு செல்லிடப்பேசிகள், சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.24 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தக் கும்பலுக்கு பன்னாலால்தான் மூளையாகச் செயல்படுகிறார். அவர் கடந்த 15 ஆண்டுகளாகப் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. 
அவர் மத்தியப் பிரதேச மாநிலம், மந்தசெளர் பகுதியில் ஹெராயினை வாங்கி, தில்லியில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகித்து வந்துள்ளார். 
அவர் ஏற்கெனவே 2013-இல் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அவர், பின்னர் தலைமறைவானார் என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com