தக்கலை காவல்நிலையம், பொதுப்பணித்துறை சார்பில் குமாரகோவிலுக்கு பால்குடம், புஷ்பக்காவடி ஊர்வலம்

தக்கலை காவல்நிலையம், பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு ஊர் சமுதாயம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட புஷ்பகாவடி, வேல்காவடி,


தக்கலை காவல்நிலையம், பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு ஊர் சமுதாயம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட புஷ்பகாவடி, வேல்காவடி, பறவைகாவடிகள் குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி கோயிலுக்கு பவனியாக வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமியை கேரள மக்கள் இன்றும் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். திருவிதாங்கூரை ஆண்ட மன்னர்கள் தங்களுடைய ஆட்சி காலத்தில் மக்கள் சுபீட்சமாக வாழவேண்டும் என்பதற்காக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் விரதம் இருந்து காவடிகள் மற்றும் யானைகள் மீது பால்குடம் எடுத்து சென்று அருள்மிகு குமாரசுவாமிக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம். மன்னர் ஆட்சி முடிவுற்று கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த பிறகும் இப்பழக்க வழக்கங்கள் இன்று வரை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
அது போல் நிகழாண்டும் தக்கலை காவல் நிலையத்திலும், பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது . பின்னர் முத்துகுடை பிடிக்கப்பட்ட யானை மீது பால் குடம் ஏந்தி மேளதாளங்கள் முழங்க வீதி உலா புறப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நீதிபதி முத்துராமன், டி.எஸ்.பி.கார்த்திகேகயன், ஆய்வாளர்
அருள்பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், முருகன், காவலர்கள் . மத்திய அரசு வழக்குரைஞர் வேலுதாஸ் , ஊர்மக்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் புலியூர்குறிச்சி, பிரம்மபுரம் வழியாக குமாரகோவிலுக்கு காவடிகள் பவனியாக எடுத்து செல்லப்பட்டது.
இது போல், வழுக்கலம்பாடு, பத்மநாபபுரம், முத்தலக்குறிச்சி, கீழ கல்குறிச்சி , காரவிளை, கொல்லன்விளை, தென்கரை, தோப்பூர், பிரம்மபுரம், குமாரகோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பால்குடம் எடுத்து அலகு குத்தி, பறவை காவடி, வேல்காவடி, சர்பகாவடி, புஷ்பகாவடிகள் உள்ளிட்ட 112 காவடிகள் பவனியாக குமாரகோவிலை வந்தடைந்தன. பின்னர் காவடிகள்பக்தர்கள் எடுத்துவந்த பால்குடத்திலுள்ள பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேவஸம்போர்டு இணை ஆணையர் அன்பு மணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம். மேலாளர் மோகனகுமார், காவல்துறை அலுவலர்கள் மற்றும் குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது , கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமியை வழிபட்டு சென்றனர்.
இவ்விழாவையொட்டி புலியூர்குறிச்சி சாலையின் இருபக்கங்களிலும் வாழைத்தார்கள், அலங்கார வளைவுகள், வண்ண தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com