இரணியல் அருகே பன்றிக் காய்ச்சலால் பெண் சாவு

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.


கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.
குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறப்பு வார்டில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஜோசப்கிங் மனைவி எஸ்தர்கிங் (46). இவர் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டபோது, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி எஸ்தர்கிங் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.
இதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை தெரசா, தக்கலை பருத்திவிளையைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி சுகன்யா, தெங்கம்புதூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ரவிச்சந்திரன், தக்கலை திருவிதாங்கோடு புதுப்பள்ளியைச் சேர்ந்த சக்ரியா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மர்மக் காய்ச்சலால் இருவர் சாவு: தக்கலை அருகே பாலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முந்திரி ஆலை தொழிலாளி ரெத்தினபாய் (45). கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் திங்கள்கிழமை காலை இறந்தார்.
அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சண்முகவேல் (68). காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.
ரெத்தினபாய் மற்றும் சண்முகவேல் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் பரவியது. ஆனால், அவர்கள் மர்மக் காய்ச்சலால் இறந்ததாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவத் துறையின் அறிக்கையை பார்த்த பின்னரே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்து உறுதியாகக் கூற முடியும் என்றும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com