ஆற்றூர், சித்திரங்கோடு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் மக்கள் மனு

ஆற்றூர், சித்திரங்கோடு பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆற்றூர், சித்திரங்கோடு பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குமரி மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அப்போது, திருவட்டாறை அடுத்துள்ள ஆற்றூரை சேர்ந்த தேசிய வாள்சண்டை வீரர் டேவிட்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்றூர் கிளை செயலாளர் சேம்ராஜ் ஆகியோர் முன்னிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் அளித்த மனு:
ஆற்றூர் அருகே சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள், மழலையர் பள்ளிக்கூடம், உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மார்த்தாண்டம், பேச்சிப்பாறை நெடுஞ்சாலையில் ஆற்றூர் சந்திப்பில் செயல்பட்டு வரும் 2 மதுக்கடைகளை அகற்றி, அந்த கடைகளை ஆற்றூர் பகுதிக்குள்பட்ட கொல்லக்குடிவிளை பகுதியில் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன. இந்த கடையால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர். எனவே, ஆற்றூர் பகுதியில் அமையவுள்ள மதுக்கடைக்கு உரிமம் வழங்காமல், மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேய்க்கோடு நீரினை உபயோகிப்போர் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
வேர்கிளம்பி சந்திப்பில் இருந்த மதுக்கடையை மூடிய பிறகு நெடுஞ்சாலைத் துறை சாலையின் அருகே 500 மீட்டருக்குள் மதுபான கடை திறக்கப்படாது என டாஸ்மாக் மேலாளர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இதன்பிறகு, கடந்த 13  ஆம் தேதி காவல் துறை பாதுகாப்புடன் மதுக்கடையை திறக்க முயன்றபோது மக்கள் எதிர்ப்பால், கடை திறப்பு ரத்து செய்யப்பட்டது. வேர்கிளம்பி பேரூராட்சி, சித்திரங்கோடு, குலசேகரம் நெடுஞ்சாலைத் துறை சாலையில் சாண்டம் பகுதியில் 2 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. 3 ஆவது டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடப்பதை அறிந்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, வேர்கிளம்பி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:
கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வடகிழக்குப் பகுதியில் தோவாளை வட்டத்தில் 16 ஊராட்சிகளும், 4 பேரூராட்சிகளும் உள்ளன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள இப்பகுதியில் இயற்கைப் பேரிடர்கள் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. ஆனால், இங்கு உயிர்காக்கும் மையங்கள் எதுவும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மீட்புத்துறை வர பலமணி நேரம் ஆகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, தோவாளை வட்டாரப் பகுதியில் தீயணைப்பு நிலையம், இயற்கை பேரிடர் மீட்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் ஊர் தலைவர் பயஸ்ராஜ் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
தேவசகாயம் மவுண்ட் மலையடிவாரத்தில் மண் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக தடையை மீறி பல ஆயிரம் டன் மண் தினமும் கடத்தப்படுகிறது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com