விலைமதிப்பு மிக்க பொருள்களைப் பாதுகாக்க கோயில்களில் தனி அறை அமைக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்து கோயில்களிலும் உள்ள விலைமதிப்பு மிக்க

தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்து கோயில்களிலும் உள்ள விலைமதிப்பு மிக்க சிலைகள் உள்ளிட்ட பொருள்களைப் பாதுகாக்க கோயில்களில் பாதுகாப்பு அறைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கடந்த மாதம் 31ஆம் தேதி மூலவர் சிலை உள்ளிட்ட சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கோயிலுக்கு புதன்கிழமை வந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோயிலில் திருட்டு நடந்த பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
குமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் 2 ஆவது சிவாலயமாக உள்ளது இந்தக் கோயில். இங்கு கடந்த 31 ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் மூலவர் உள்ளிட்ட சாமி சிலைகளை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு சிறப்பு காவலர் குழுவை நியமித்துள்ளது. அவர்களின் விசாரணையில் நம்பிக்கையில்லை. தமிழக அரசு இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் விலைமதிப்பு மிக்க நகைகள், பழைமையான சுவாமி சிலைகளைப் பாதுகாக்க பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பூசாரிகள், ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கோயில் ஊழியர்களை அரசு மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். 
திக்குறிச்சி கோயில் திருட்டு வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இக்கோயிலில் திருட்டுப்போன சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை அறநிலையத் துறை குறைவாக மதிப்பிட்டுள்ளது. சிலைகளின் மதிப்பு குறித்து ஆரம்ப நிலையிலிருந்து விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.
அவருடன், பாஜக மாவட்ட தலைவர் எஸ். முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலர் கே.எஸ். முருகன், கோட்ட பொறுப்பாளர் சி. தர்மராஜ், களியக்காவிளை மண்டல தலைவர் எஸ்.ஆர். சரவண வாஸ் நாராயணன், கட்சி நிர்வாகிகள் சி.எஸ். சேகர், திக்குறிச்சி சுகுமாரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், சதீஷ்சந்திரன், அருள்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
துரைமுருகனுக்கு கண்டனம்: நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அளித்த பேட்டி:
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை குழந்தைபோல பேசுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். குழந்தையாக இருப்பதில் தவறில்லை, குழப்பவாதியாகத்தான் இருக்கக் கூடாது.
தமிழகத்தில் திமுகவினர் நடத்திய போராட்டம், அவர்களுக்கு எதிராக அவர்களே நடத்திய போராட்டமாகும். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சில நாள்களில் கவிழ்ந்துவிடும் என மு.க. ஸ்டாலின் ஆருடம் கூறிவருகிறார். 
அவர் ஆருடம் கூறுவதை நிறுத்திக்கொண்டு தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் குறித்து பேசவேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com