வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர்தனி வாக்குப்பதிவு நடத்த கோரி மனு

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்த்து அவர்களுக்காக தனி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்த்து அவர்களுக்காக தனி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரேவிடம், அச்சங்கத்தின் பொதுச்செயலர் அந்தோணி தலைமையில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14, 67,796. தற்போது 2019 தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் 14,93,509. கடந்த 5  ஆண்டுகளில் 25, 713  புதிய  வாக்காளர்கள் மட்டும் சேர்க்கப்பட்டதாக புள்ளி விவரப்படி தெரிவித்துள்ளனர்.
இந்த மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 24 ஆயிரம் பேர் 18 வயதை தாண்டி வருகின்றனர். இதன்படி சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாக்காளர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோல் சராசரி இறப்பு விகிதப்படி மாதம் 700 பேர் வீதம் 5 ஆண்டுகளில் 42 ஆயிரம் பேரை குறைத்தால்,  சுமார் 78 ஆயிரம் வாக்காளர்களாவது அதிகரித்திருக்க வேண்டும். 
இதன்படி,  வாக்காளர்களின் எண்ணிக்கை, 15 லட்சத்து 71 ஆயிரம் என உயர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வாக்காளர் எண்ணிக்கை 14லட்சத்து 93 ஆயிரத்து 509 என்ற அளவிலேயே உள்ளது. சட்டப்பேரவைத்  தொகுதி வாரியாக கணக்கிட்டால், கன்னியாகுமரியில் 526 பேர், நாகர்கோவில் தொகுதியில் 9 , 835 பேர், பத்மநாபபுரம் தொகுதியில் 10,035 பேர்,  குளச்சல் தொகுதியில் 8,472, விளவங்கோடு தொகுதியில் 3,512 பேர், கிள்ளியூர் தொகுதியில் 13 , 032 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவ மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.
எனவே, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தற்போது வரை வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு நடத்தி வருகிற மே 23  ஆம் தேதிக்குள் வாக்களிக்கும் உரிமை வழங்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்து, நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும். மேலும் தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com