வனத்துறை-காவல்துறை மோதல் சம்பவம்: உதவி வனப்பாதுகாவலர் உள்பட 14 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டம்  வேளிமலை வனச்சரக அலுவலகத்தில் நக்சல் தடுப்பு சிறப்பு ஆய்வாளரை தாக்கியதாக

குமரி மாவட்டம்  வேளிமலை வனச்சரக அலுவலகத்தில் நக்சல் தடுப்பு சிறப்பு ஆய்வாளரை தாக்கியதாக வனத்துறை உயர்அதிகாரி உள்பட 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் நக்சல் ஊடுருவலைத் தடுக்கும் பிரிவில் சிறப்பு ஆய்வாளராக சாம்சன் (43)  பணி செய்து வருகிறார். அவருடன் போலீஸார் அடங்கிய குழுவும் உள்ளது. இவர்கள் வனப்பகுதிகளில் நக்சல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சன் நட்பு வட்டத்தில் பல்வேறு தன்னார்வக் குழுக்களை வைத்துள்ளார். இக்குழு வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இக்குழுவினர் வனப்பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவதாகவும், வல விலங்குகளின் அருகில் நின்று புகைப் படங்கள் எடுப்பதாகவும், உள்காடுகளுக்குள் செல்வதாகவும், புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு இக்குழுவினர் மீது அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில் பேச்சிப்பாறை அருகே தச்சமலை பழங்குடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா கொண்டாடும் வகையில் தன்னார்வலர்கள் 8 பேர் ஒரு டிரக்கிங்  ஜீப்பில் பொருள்களை சீரோ பாயின்ட் சோதனைச் சாவடி வழியாக கொண்டு சென்றனர். 
அப்போது,  மாவட்ட வன அலுவலரின் அனுமதியின்றி காட்டுக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை.  அவர்களை  வேளிமலை வனச்சரக அலுவலத்திற்கு கொண்டு வந்து அடைத்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் சாம்சன், தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதனால் பொங்கல் விழா நடைபெறவில்லை.
இதனிடையே,   வேளிமலை வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  டிரக்கிங் ஜீப்பை எடுக்க சென்ற ஆய்வாளர் சாம்சனுக்கும், அங்கு பணியில் இருந்த மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் ஷாநவாஸ்கான் உள்ளிட்ட வனச்சரக அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதில் வனத்துறையினர் ஆய்வாளர் சாம்சனை  தாக்கி, அவரது செல்லிடப்பேசியை சேதப்படுத்தினராம். அவர் அணிந்திருந்த வெள்ளி சங்கிலியையும் பறித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆய்வாளரிடம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்.
14 பேர் மீது வழக்கு: இதைத் தொடர்ந்து சாம்சன் அளித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸார் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் ஷாநவாஸ்கான், வனச்சரகர்கள் சில்வெஸ்டர், கலையரசன், வனவர்கள் அருண், சிவராமன், இசக்கிமுத்து மற்றும் வனக்காவலர்கள் ரவி, ஆறுமுகம், முருகன், தங்கராஜ், ரமணன், பாலமோகன் உள்பட 14 பேர் மீது கொலை மிரட்டல்,  அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்தல், சிறு காயம் ஏற்படுத்துதல் உள்பட 7 பிரிவுகளில் குலசேரகம் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சாம்சன் குலசேகரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிசிச்சை பெற்று வீடு திரும்பினார்.
டிஎஸ்பி  ஆலோசனை: இந்நிலையில் திங்கள்கிழமை  மீண்டும் குலசேகரம் காவல் நிலையம் வந்த டிஎஸ்பி கார்த்திகேயன் போலீஸாருடன் இந்த வழக்கு குறித்து ஆலோசனை  நடத்தினார். 
காவல் ஆய்வாளர்கள் மீது வனத் துறை வழக்குப் பதிவு: இதற்கிடையே, வேளிமலை வனச்சரக அலுவலக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை எடுத்துச் சென்றது தொடர்பாக  நக்சல் தடுப்புப் பிரிவு சிறப்பு ஆய்வாளர் சாம்சன் மீதும், குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வதங்கம் மீதும் வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com