ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை குமரியில் வளர்க்க, விற்கத் தடை

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்க்கவும், விற்பனை செய்யவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்க்கவும், விற்பனை செய்யவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதா கெண்டை மற்றும் திலேப்பியா போன்ற மீன் வகைகளை தேர்வு செய்து, விவசாயிகள் மீன் வளர்ப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மத்திய, மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது, விற்பனை செய்வது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன் இனங்களானது மற்ற மீன்களையும், பிற நீர்வாழ் உயிரினங்களையும் அதி தீவிரமாக இரையாக உட்கொள்ளும். நமது பாரம்பரிய மீன்கள், வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை உடையது.
ஆகையால், நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் அபாயம் உள்ளது. மேலும், இந்த மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராண வாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிகக் குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் உடையது. இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்கள் உடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு, அவற்றின் மரபியலை சிதைத்து பல்பெருக்கமடையும் வல்லமை உடையது. எனவே, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது, விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகார்கள், ஏதேனும் பெறப்பட்டால் அந்த மீன்களை முற்றிலும் அழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் இவ்வகை மீன்களை வாங்க வேண்டாம். மீன்வளத்துறை, மீன்வள பல்கலைகழகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் மீன் இனங்களை மட்டுமே வளர்த்து மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராகி அரசு  சலுகைகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com