மக்கள் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலை மூடல்:  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மக்களின் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்துள்ளது என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மக்களின் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்துள்ளது என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு பார்வையிட்டு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இறுதி அறிக்கை சமர்ப்பித்த பின், மத்திய அரசு நல்ல நிவாரண  தொகையை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அண்டை மாநிலமான கேரளத்துக்கு நிவாரணமாக ரூ.3,048 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 4 டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். கோரிக்கைக்கு ஏற்ப தேவையான நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக அரசு மக்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பளித்துதான், 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு தீர்வு கண்டுள்ளது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில்தான் அந்த ஆலை மூடப்பட்டுள்ளது என்றார் அவர்.
தேர்தல் களத்தை சந்திக்க தயார்:  அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் கூறியது: எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்புவது நடந்து வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18  சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். அதை ஏற்று அவர்கள் வந்தால் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளோம்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்திக்க பயந்து கூட்டணிகளை அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றன.
ஆனால்,  அதிமுக தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்க தயாராகி வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலிலும்,  2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. 
தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு யாராவது வந்தால் அதுகுறித்து தலைமை முடிவு செய்யும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com