குடிநீர் வசதி, கால்வாய் தூர்வார வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், குடிநீர் வசதி செய்துதர வலியுறுத்தியும், நீர்வரத்து கால்வாயை தூர்வார


தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், குடிநீர் வசதி செய்துதர வலியுறுத்தியும், நீர்வரத்து கால்வாயை தூர்வார வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மேல தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மேல தட்டபாறை ஊராட்சிக்குள்பட்ட கேம்ப் தட்டப்பாறை, மேல தட்டப்பாறை, எஸ்எஸ் காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களில் ஏறத்தாழ 650- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது, மேல தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, எஸ்எஸ் காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதியை உமரிக்கோட்டையில் உள்ள கிணற்றில் இருந்து பம்பிங் செய்து வழங்கி வருகின்றனர்.
அந்தத் தண்ணீர் அதிக உப்புத்தன்மை உடையதாகவும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தகுதியற்ற நிலையிலும் இருந்து வருகிறது. எனவே, எங்களது கிராமத்துக்கு அருகே செல்லும் சீவலப்பேரி கூட்டுக் குடி நீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் இருந்து மேலத்தட்டப்பாறை , உமரிக்கோட்டை ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மனு: தாமிரவருணி ஸ்ரீவைகுண்டம் வடகால் மடை எண் 1, விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தினர் ஆட்சியரிடம் அளித்த மனு: கால்வாயை சீரமைக்கும் பணிகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் செய்து வந்தனர். அதனால் எங்கள் பகுதி விவசாயிகளும் பயன் அடைந்து வந்தனர். கால்வாயை மீண்டும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கால்வாயை தூர்வார உதவும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரை அகற்ற வலியுறுத்தல்: தூத்துக்குடி கோரம்பள்ளம் சேகரகுரு தனசிங் தலைமையில் அந்தப் பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் சேர்ந்து ஊரை சுற்றிலும் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கோரம்பள்ளம் வடக்குதெரு, கோயில் தெரு, பிஎஸ்பி நகர் 1,2,3 அன்னை ஸ்கொயர் தெரு, பரிபூரண காலனி உள்பட அனைத்து தெருக்களில் தண்ணீர் தேங்கி புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீரை அகற்ற வடிகால் வசதியும், அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் மனு: தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கைகள் பலர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி பகுதியில் பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற திருநங்கைகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, பிற மாவட்டங்களில் செயல்படுத்துவது போல் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com