தூத்துக்குடி மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற

தூத்துக்குடி, கோவில்பட்டியில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் பிரதான நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும் சங்கரராமேஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார யாகமும், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர், மாலை 5.30 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி யானை, சிங்கம், சேவல், சூரன் முகம் கொண்ட சூரனை வதம் செய்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, தூத்துக்குடி எஸ்எஸ் பிள்ளை மார்க்கெட் சுப்பிரமணியசுவாமி கோயில், சிதம்பரநகர் சிதம்பரவிநாயகர் கோயில், புதுக்கிராமம் வரத விநாயகர் கோயில், சண்முகபுரம் கன்னிவிநாயகர் கோயில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் மற்றும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், காலை 10 மணிக்கு சண்முகர் சமேத வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை சுமார் 4.30 மணிக்கு கோயிலிலிருந்து சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. பின்னர், கோயில் பின்புறம் அமைந்துள்ள காந்தி மைதானத்தில் 6.45 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியராஜன், ஜனக் கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம், மண்டகப்படிதாரர்களான ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  
புதன்கிழமை (நவ.14)  இரவு 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி சமேத வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது.
கோவில்பட்டி அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் கார்த்திகேயர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
5ஆம் நாளான திங்கள்கிழமை கழுகாசலமூர்த்தி கோயிலில் தாரகாசூரன் வதம் நடைபெற்றது. 6ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை அரண்மனை வாசல் தெருவில் மாலை 5.15  மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், கோயில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன், பிரதோஷக் குழுத் தலைவர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (நவ. 16) இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், சனிக்கிழமை (நவ. 17)  பட்டணப் பிரவேசமும் நடைபெறும்.
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சிகொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் கந்த சஷ்டியையொட்டி சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள்,சோடச தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஓதுவார்களால் திருப்புகழ் பாராயணம் செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு சிஙகமுகன், தாராகாசூரன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்த சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார். பின்னர், மாமரமாக உருமாறி நின்ற சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.
ஆறுமுகனேரி:  சேர்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் சமேத அருள்மிகு சௌந்தர்யநாயகி அம்பாள் திருக்கோயிலிலில்  செவ்வாய்க்கிழமை காலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி,  வள்ளி,  தெய்வானைக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  மாலையில் அருள்மிகு சுப்பிரமணியர் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com