ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயக் குழுவினர் 2 ஆவது நாளாக ஆய்வு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர், இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசு அந்த ஆலைக்கு கடந்த மே 28 ஆம் தேதி சீல் வைத்தது. இதையடுத்து, ஆலை நிர்வாகம் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்து, ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதுதொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குநரக விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தனர்.
இதையடுத்து, ஆய்வு மேற்கொள்வதற்காக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை தூத்துக்குடி வந்தனர். முதல்கட்டமாக தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பகுதியில் கொட்டப்பட்டுள்ள தாமிர கழிவுகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயக் குழுவினர், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனர். காலை 8.30 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற ஆய்வுக் குழுவினர், ஆலை நிர்வாகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் இந்த ஆய்வு நீடித்தது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாம சுந்தரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் லிவிங்ஸ்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் சுடுகாடு பகுதி, டி.குமாரகிரி, காயலூரணி பகுதிகளுக்கு ஆய்வுக் குழுவினர் சென்று பார்வையிட்டனர். பின்னர் அ.குமரெட்டியாபுரம் பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் கருத்துக் கேட்டனர்.
பின்னர், தெற்கு வீரபாண்டியபுரம் வழியாக ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்று பார்வையிட்ட ஆய்வுக் குழுவினர், அங்கிருந்த ஆலை ஊழியர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஏறத்தாழ 2 ஆயிரம் மனுக்களைப் பெற்ற ஆய்வுக் குழுவினர் மாலை 4 மணியளவில் தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com