எட்டயபுரத்தில் மகாகவி பாரதி விழா கருத்தரங்கம்

எட்டயபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்திய 57ஆவது ஆண்டு

எட்டயபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்திய 57ஆவது ஆண்டு மகாகவி பாரதி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில்  அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
பாரதி நினைவு மணிமண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு,  பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சோ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் சி. சொக்கலிங்கம்,   பொருளாளர் பா. ரமணி,  பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின்  தொடக்க நிகழ்வாக,  தமிழகம்,  கேரளம், ஆந்திரம்,  பஞ்சாப்,  பிகார்,  தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள்,  கவிஞர்கள்,  பாரதி அன்பர்கள் பங்கேற்ற  கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பஞ்சாபி சாகித்ய அகாதெமி தலைவர் சுக்தேவ் சிங் "சகிப்பின்மை மற்றும் வன்முறை கலாசாரம்' என்ற தலைப்பிலும்,  பிகார் முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலர் வினீட் திவாரி "பாரதி காலம் முதல் இன்று வரை'  என்ற தலைப்பிலும்,  கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலர் மோகன்தாஸ்  "முற்போக்கு இலக்கியத்தின் திசை' என்ற தலைப்பிலும்,  ஆந்திரம் மாநில முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலர் லட்சுமி நாராயணா "அரசியல் கலை இலக்கியத்தில் பாசிச போக்கு' என்ற தலைப்பிலும்,  ராச்சபலம் சந்திர சேகர ரெட்டி "இந்துத்துவா சவால்கள்'  என்ற தலைப்பிலும், வல்லூறு சிவபிரசாத் "கலை இலக்கியத்தில் தற்கால போக்கு' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். 
தொடர்ந்து கலைமாமணி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சியும்,  கவிஞர் ரவீந்திர பாரதி தலைமையில் "ஒன்றுண்டு மானிட சாதி' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது.
இதில் கவிஞர்கள் கவிதா ராஜ முனீஸ்,  வேலன் சங்கர் ராம்,  சஹானா, கண்மணி ராஜா ஆகியோர் கவிதை வாசித்தனர்.  அதைத் தொடர்ந்து தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் பாரதி கனவு கண்ட பாரத சமுதாயம் அமையவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.
"மக்கள் கவிஞன் பாரதி'  எனும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரை,  கவிதை, பேச்சு,  ஓவியம்,  விநாடி -வினா போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்,  மாணவிகளுக்கு பரிசுகள்,  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
நிறைவாக பள்ளி மாணவர்,  மாணவிகள் பங்கேற்ற கிராமிய கலைநிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில்,  அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலர் ராஜேந்திர ராஜன்,  எழுத்தாளர்கள் த. அறம், மகா. சுந்தர், கவிஞர் ந. முத்துநிலவன், பாரதி முற்போக்கு வாலிபர் சங்க நிர்வாகிகள் மு. மணிபாரதி, முருகேஷ், வெங்கடேஷ் ராஜா, பாரதி இல்ல காப்பாளர் செ. மகாதேவி,  பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ, பேராசிரியர் சுப்பாராஜ், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, கனகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com