நியாயவிலைக் கடை கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி சொக்கன் ஊருணித் தெருவில் நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அப்பகுதியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 

கோவில்பட்டி சொக்கன் ஊருணித் தெருவில் நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அப்பகுதியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 21, 22ஆவது வார்டு பகுதி மக்கள் சில மாதங்களாக செக்கடித் தெருவில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடையில் பொருள் வாங்கி வந்தனர். நியாயவிலைக் கடையைக் காலி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து, பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் அப்பகுதியில் தனியார் பள்ளிக்கு எதிர்புறமுள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நியாயவிலைக் கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சொக்கன் ஊருணி, ஏ.கே.எஸ். தியேட்டர் சாலை, ஆசிரமம் தெரு, முத்தானந்தபுரம் 1, 2ஆவது தெரு, சந்தைப்பேட்டை தெரு பகுதிகளைச் சேர்ந்த 691 குடும்ப அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்க ஒரு கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் ஏற்படும் அலைச்சல், பண விரயத்தைத் தடுக்க சொக்கன் ஊருணித் தெருவில் உழவர் சந்தை அருகே நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நியாயவிலைக் கடை கட்ட வலியுறுத்தி அப்பகுதியினர் அதிமுக 21ஆவது வார்டு  கிளைச் செயலர் சிங்கராஜ் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். குடும்ப அட்டைகளை தரையில் போட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com