காஷ்மீரில் வீரமரணமடைந்த சுப்பிரமணியனுக்குசிலை, மண்டபம் அமைக்க வேண்டும்: வைகோ

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியனுக்கு சிலை

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியனுக்கு சிலை, மண்டபம் அமைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார். வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் வைகோ மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வீரமரணமடைந்த சுப்பிரமணியன் குடும்பத்துக்கு எதைச் செய்தாலும் இழந்த உயிரை திரும்பப் பெற முடியாது. சுப்பிரமணியனின் மனைவி பட்டதாரி. அவரது கல்விக்கு ஏற்றவாறு அரசு வேலை வழங்க வேண்டும். அதுபோல, அவரது சகோதரருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி ஊர் எல்லையில் சுப்பிரமணியனுக்கு சிலை, மண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அரசு செய்யாவிட்டால், எந்த அரசியல் கட்சியின் அடையாளமும் இன்றி சிலையும், மண்டபமும் நானே அமைப்பேன் என்றார் வைகோ.
அவருடன் மதிமுக மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ்.ரமேஷ், செல்வம், தி.மு.ராஜேந்திரன், இளைஞரணி மாவட்டச் செயலர் விநாயகா ரமேஷ், நகரச் செயலர் பால்ராஜ் உள்பட திரளானோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com