வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் உடல்களைப் பெற உறவினர்கள் மறுப்பு: பட்டாசு ஆலை நிர்வாகம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு ஆலை

திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சடலங்களை பெற மறுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சடலங்களை பெற்றுச் சென்றனர்.
திருவேங்கடம் அருகே வரகனூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த, வரகனூர் 1ஆவது தெருவைச் சேர்ந்த குருசாமி மனைவி மாரியம்மாள்(45), ஏழாயிரம்பண்ணை மேலசத்திரத்தைச் சேர்ந்த ஜெயக்கண்ணன் மனைவி கஸ்தூரி (45), வரகனூர் நடுவப்பட்டியைச் சேர்ந்த அன்னராஜ் மனைவி பெரிய கிருஷ்ணம்மாள்(50), திருத்தங்கல் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சின்னப்பன் மகன் நீதிராஜ் (48) ஆகியோரின் உடல்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதில், நீதிராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை இரவே சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்நிலையில், சனிக்கிழமை காலை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கஸ்தூரி, மாரியம்மாள், பெரிய கிருஷ்ணம்மாள் ஆகியோரின் உடல்களை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, ஆலை நிர்வாகம் சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் உடல்களைப் பெற மறுத்தனர். 
இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் திருவேங்கடம் வட்டாட்சியர் லட்சுமி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன் (சங்கரன்கோவில்), ஜெபராஜ் (கோவில்பட்டி), ஆய்வாளர் சுரேஷ்குமார் (சிவகிரி)  ஆகியோர் பேச்சு நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடல்களைப் பெற்றுக் கொள்ள உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். வெடிவிபத்தில் காயமடைந்து உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் குகன்பாறையைச் சேர்ந்த காளிராஜ் மகன் வேல்தாய், பெரியமாரியப்பன் மனைவி வள்ளியம்மாள், பாலமுருகன் மனைவி முனியம்மாள், வரகனூரைச் சேர்ந்த குருசாமி மனைவி துளசியம்மாள், வேலுசாமி மனைவி லட்சுமி, குகன்பாறையைச் சேர்ந்த குருநாதன் மனைவி முத்துமாரி ஆகிய 6  பேரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனபால் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஜெபராஜ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com