தா. பழூரில் கேந்தி பூக்களின் விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டம், தா. பழூரில் பகுதியில் கேந்தி பூக்களின் (செண்டிப்பூ) விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நறுமணப் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைத்து பூக்களை


அரியலூர் மாவட்டம், தா. பழூரில் பகுதியில் கேந்தி பூக்களின் (செண்டிப்பூ) விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நறுமணப் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைத்து பூக்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் தா. பழூர்,திருமானூர் உள்ளிட்ட பகுதிகள் டெல்டா பகுதியாகவும் மற்றவை வறட்சியான பகுதியாகவும் உள்ளன. இந்த வறட்சிப் பகுதிகளில் மழை வந்தால் சோளம், நிலக்கடலை எனப் பயிரிட்டு வந்த அரியலூர் மாவட்ட விவசாயிகள் தற்போது கேந்தி  மற்றும் சம்பங்கி மலர்ச் சாகுபடிக்கு மாறியுள்ளனர். இதற்குக் காரணம் இம்மாவட்டத்தில் 900 அடி ஆழத்துக்கு போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இங்குள்ள சிமென்ட் ஆலைகளால் விவசாயம் அழிந்து, விவசாய நிலங்கள் தற்போது மேய்ச்சல் நிலமாக மாறி வருகின்றன.
இந்நிலையில் நறுமணம் வீசும் கேந்தி மற்றும் சம்பங்கி, பளபள வண்ணம் காட்டும் பட்டுப்பூ (கோழிக்கொண்டை) என மலர்ச் சாகுபடியில் சிறப்பான வருமானத்தை அரியலூர் மாவட்ட பெரும்பாலான விவசாயிகளும் ஈட்டிவருகின்றனர்.
ஒரு காலத்தில் மல்லி, மிளகாய்ச் சாகுபடியில் பெயர் பெற்ற அரியலூர் மாவட்டம் தற்போது  மலர்ச் சாகுபடியில் முத்திரை பதித்து வருகிறது. அனைத்துவித விழாக்கள் விசேஷங்களில் பயன்படும் கேந்தி  மலருக்கு எப்போதும் நல்ல வரவேற்புள்ளது. தினமும் அதிக வருமானம் ஈட்டித் தரும் மலர்களில் முக்கியப் பங்கு வகிக்கும் இப்பூ விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்துகிறது.
அதிக நறுமணம் கொண்ட இந்தப் பூக்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் காவிரி டெல்டா பகுதியான தா. பழூர் பகுதிகளில் இந்தப் பூச்செடிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.  குறிப்பாக தா.பழூர், சிலால், விளாங்குடி,சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக  பயிரிடப்பட்ட செடிகளில்  தற்போது அறுவடைப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அறுவடை செய்யப்பட்ட பூக்களை கும்பகோணம் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். மாலை கட்டப் பயன்படுத்தப்படும் இப்பூக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருப்பதாகவும், சந்தைகளில் நல்ல விலைக்கு கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து  அவர்கள் மேலும் கூறுகையில் கேந்திப் பூ, நிலக்கடலை, செங்கரும்பு,  செடிமுருங்கை எனப் பருவத்துக்கு ஏற்றாற்போல பயிர் செய்து வருகிறோம். அரசு எங்களுக்கு மானிய விலையில்  இடுபொருள்கள், இலவச மின்சாரம் வழங்கியுள்ளது  பேரூதவியாக உள்ளது. மேலும்  அவ்வப்போது வேளாண் அலுவலர்கள் எங்களுக்கு தொழில் நுட்பங்கள்,  தேவையான ஆலோசனைகளை வழங்கியதால் விளைச்சல் இந்தாண்டு அதிகரித்துள்ளது என்றனர்.
மேலும் இவ்வகை பூக்களைக் கொண்டு தமிழக அரசு நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இத்தகைய பூக்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com