பெரம்பலூர், அரியலூரில்  ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம்

தங்களின் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர்

தங்களின் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை முதல்  பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.  இரு மாவட்டங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள்,  வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட பல்துறைகளில் பணியாற்றுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.  அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர்  வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களிலும் பணியாளர்கள் அதிகம் பணிக்கு வரவில்லை.
பெரம்பலூர் :  பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியரகம் எதிரில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு   கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஈ. ராஜேந்திரன், பெ. ராஜ்குமார், ப. குமரி ஆனந்தன், ச. அருள்ஜோதி, மு. கவியசரன், ஆ. ராமர் ஆகியோர் தலைமை வகித்தனர். 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கி. மகேந்திரன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒய்.ஆர். செல்வராஜ், மு. பாரதிவளவன், பொ. வெங்கடேசன், ராமராஜ், சி. சுப்ரமணியன், த. கலியமூர்த்தி, பா. சிவக்குமார், ஆ. கமலக்கண்ணன் உள்பட 36 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.   
அரியலூர்:   அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர்,திருமானூர் ஒன்றியங்களைச் சேர்ந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு  கூட்டமைப்பு நிர்வாகி  சண்முகம்  தலைமை வகித்தார். செந்துறையில் அனந்தநாராயணன்,ஜயங்கொண்டத்தில் நம்பிராஜன்,ஆண்டிமடத்தில் சேகர் ஆகியோர் தலைமை வகித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.        
 

அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 83  சதவிகித்தினரும், மற்றப் பள்ளி ஆசிரியர்கள் 70 சதவிகிதம் பேரும் பணிக்கு செல்லவில்லை.   மொத்தமாக, 71.5 சதவிகிதம் பேர் பணிக்கு செல்லாததால் பெரும்பாலான பள்ளிகள் பூட்டிக்கிடந்தன. திருமானூர்,செந்துறை,ஜயங்கொண்டம், அரியலூர்,பொன்பரப்பி, ஆண்டிமடம்,மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொடக்கப் பள்ளி பணியாற்றி வரும் ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வராததால், பள்ளியின் வகுப்பறைக் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன.

சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு இயக்க நடவடிக்கை
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 210 அரசுப் பள்ளிகளில் பணிக்கு ஆசிரியர்கள் பெரும்பாலானோர் செல்லாததால்  பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆசிரியர் வராதப் பள்ளிகளில் கல்வித் துறை மற்றும் சத்துணவுத் துறை அலுவலர்கள் இணைந்து  மாற்று ஏற்படாக சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு பள்ளிகளில் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்த 14 பள்ளிகளைத் திறந்து சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் பணிகள் நடைபெற்றன. புதன்கிழமை அனைத்துப் பள்ளிகளும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, ஊரக வளர்ச்சித் துறையிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்குச் செல்லாததால், அன்றாட அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.                                                  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com