பசுபதீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம்

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம், வெண்ணைமலை, புகழிமலை முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை 

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம், வெண்ணைமலை, புகழிமலை முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம், வெண்ணைமலை முருகன்கோயில், வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோயில், பாலமலை முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கும் காலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து மாலையில் முருகப்பெருமான் சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலில் யானை முகம் கொண்ட தாராசூரனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்வதும், பின்னர் சிங்க முகமாகவும், தன்முகமாகவும் உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்து, இறுதியில் மாமரமும், சேவலுமாக சூரன் உருமாறும்போது சுவாமி சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார். 
இதையடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியை திருக்குறள் பேரவை செயலர் மேலை.பழநியப்பன், மருதநாயகம் ஆகியோர் வர்ணனை செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com