ஆதிதிராவிட பெண் குழந்தைகளுக்கு கனரா வங்கி சார்பில் கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு கனரா வங்கி மூலம் ரூ. 2,02,500 மதிப்பிலான

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு கனரா வங்கி மூலம் ரூ. 2,02,500 மதிப்பிலான கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் புதன்கிழமை வழங்கினார்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற 5 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு கனரா வங்கி சார்பில் "கனரா வித்யா ஜோதி' என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையை வழங்கி மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் பேசியது:
2013 ஆம்  ஆண்டு முதல் அகில இந்தியளவில் ஆண்டுதோறும் அனைத்து கனரா வங்கிக் கிளைகளிலும் "கனரா வித்யா ஜோதி" என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
இத்திட்டத்தில் 5 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண் குழந்தைகளில் அதிக மதிப்பெண் பெறுவோரை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வங்கியால் வழங்கப்படுகிறது.
5 முதல் 7 வகுப்பு வரையுள்ள பெண் குழந்தைகளுக்கு ரூ.2,500, 8 முதல் 10 வகுப்பு வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது.  அதனடிப்படையில் தற்போது கரூர் மாவட்டத்திலுள்ள 9 கனரா வங்கிக் கிளைகளிலிருந்து 54 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ. 2,02,500 மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் தலா ரூ.2,02,500 மதிப்பிலான கல்வி உதவித்தொகை வீதம் 2013 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரூ.1,215,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
கல்வியே வாழ்வின் அழியாச்செல்வமாகும். கல்வியே ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அடித்தளமாக விளங்குகிறது.  இன்றைய மாணவ, மாணவிகளாகிய நீங்கள் எதிர்காலச் சமுதாயத்தின் தூண்கள். ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனது வீட்டுக்கு மட்டும் ஒளிவிளக்காக அமையும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது இந்த நாட்டிற்கே ஒளிவிளக்காக அமையும் என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள். சமுதாயத்திலுள்ள அறியாமை என்ற நோயை போக்க நீங்கள் கல்வி என்ற அருமருந்தை உட்கொள்ள வேண்டும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கிணங்க நீங்கள் அனைவரும் நன்கு கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்து சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும் என்றார் அவர்.  
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல், திருச்சி மண்டலத் துணைப் பொது மேலாளர்  சினேகலதா ஜான்சன், கரூர் கிளை உதவி பொது மேலாளர் ஆவுடையப்பன், முதுநிலை மேலாளர் ஆர். கிரிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com