உழைப்பின் களைப்பு போக்கும் அருமருந்தே நாட்டுப்புறப் பாட்டு

உழைக்கும் தொழிலாளர்களின் களைப்பைப் போக்கும் அருமருந்து தாலாட்டுப் பாட்டு என்றார் கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஆ. சுந்தரம்.


உழைக்கும் தொழிலாளர்களின் களைப்பைப் போக்கும் அருமருந்து தாலாட்டுப் பாட்டு என்றார் கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஆ. சுந்தரம்.
கரூர் மாவட்ட பொது நூலகத் துறை மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மாவட்ட மைய நூலத்தில் ஞாயிற்றுக்கிழமை 43-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பன்னாட்டு தமிழ் ஆய்வு கருத்தரங்கைத் தொடங்கி வைத்து,எசப்பாட்டு - நாட்டுப்புறப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஆ. சுந்தரம் மேலும் பேசியது:
தொல்காப்பியத்தில் பண்ணத்தி என்று வகைப்படுத்தப்பட்ட நாட்டுப்புறப் பாடலானது மழலை மொழியில் நம் முன்னோரால் பாடப்பட்டு அளிக்கப்பட்ட பொக்கிஷமாகும். தாலாட்டுப் பாட்டு தாய்மார்களுக்கு உரிய தனிச்சிறப்பாகும். இன்றைய குழந்தைகள் தாலாட்டைக் கேட்டு வளர்வதில்லை. தாலாட்டுப் பாட்டில் உறவு முறைகளை ஒன்றிணைக்கும் கலாசாரமும், நீலாம்பரி ராகத்தில் அமைந்த சந்தமும் இருக்கும். தொழிலாளர்கள் உழைப்பின் களைப்பை நீக்கும் அருமருந்தாக நாட்டுப்புறப் பாட்டு இன்றும் இருக்கிறது.
பண்டைய தமிழ் பாமர மக்களின் இன்பம், துன்பம், சோகம் மற்றும் நாட்டம் இவற்றை நகைச்சுவை உணர்வோடு பிரதிபலித்தது இந்த நாட்டுப்புறப் பாடல்கள்தான். ஒப்பாரிப் பாடல்களில் மகன்களை விட்டுச் செல்லும் தாய் தன் குழந்தைகளுக்கு சோகத்தை விட்டு நம்பிக்கையூட்டுவதாக அமைக்கப்பட்டிருப்பது நாட்டுப்புறப்பாடல்களின் தனிச்சிறப்பு.
அதனால்தான் இப்பாடல்கள் திரைத்துறையிலும் கால் பதித்து நம் மனங்களில் பதிந்தன.
தன்னானே என்ற ராகத்துக்கு தலையாட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்று தொல்காப்பியம் காட்டிய 10 பொருத்தங்களே திருமணப் பொருத்தம் பார்க்கும் அம்சமாக இருந்தது. தமிழர் தம் பண்டைய வாழ்வியற் களஞ்சியமாக பல்வேறு சமுதாயக் கூறுகளை காட்டும் வரலாற்றுப் பதிவுகளாக, எவருக்கும் புரியும் இசை வடிவமாக நாட்டுப்புறப் பாடல்களே இருந்தன என்றார் அவர்.
தொடர்ந்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கத்தின் தொடக்கமாக தமிழியல் மீள் ஆய்வு மைய வெளியீட்டில் ம. மோகனசுந்தரம் ஜெ. கார்த்திக் ஆகியோர் தொகுத்தளித்த வளர்தமிழ் ஆய்வுக்கோவை நூல் வெளியிடப்பட்டது.
முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட நெறியாளர் அ.ச. சேதுபதி வரவேற்றார். கரூர் மாவட்ட நூலக அலுவலர் மா. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் ப. மணிமேகலை முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட நூலக அலுவலர் எம். பழனிசாமி வாழ்த்தினார்.
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ. கார்த்திக் நன்றி கூறினார். மாவட்ட மைய நூலக நூலகர் செ.செ. சிவக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மண்மங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் மோகன்ராஜ் நிகழ்ச்சியை தொகுத்தார். நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நூலக கருத்தரங்கில் கலந்துகொண்டு திரும்பிய நல்நூலகர் செ.செ. சிவகுமாருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com