சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால்  மருத்துவச் செலவு 50 சதவீதம் குறையும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மருத்துவச் செலவு 50 சதவீதம் குறையும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மருத்துவச் செலவு 50 சதவீதம் குறையும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமைக்கப்பட்டிருந்த மதிய உணவை உட்கொண்டு தரத்தை ஆய்வு செய்தார். 
இதன்பின், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு இணை உணவு வழங்கிய ஆளுநர், நாள்தோறும் தொடர்ந்து இணை உணவு உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது உடல் எடையை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடல் நலத்தில் போதிய அக்கறை காட்ட வேண்டும் என அவர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கு தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பிய ஆளுநர், அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அங்கு குழுமியிருந்த மக்களிடம் பள்ளி சிறப்பாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினார். 
பின்னர், பெரம்பலூர் நகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நகராட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி திறப்பு, தூய்மை பாரத ரதம் தொடக்க விழா, தூய்மைக் காவலர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டார். 
தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆளுநர், தூய்மைக் காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். இதையடுத்து ஆளுநர் தலைமையில், துப்புரவுப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்றனர்.
இதில் பேசிய ஆளுநர், பெரம்பலூர் மாவட்டத்தை, இங்கு வசிக்கும் மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மாநிலத்திலேயே சுகாதாரமான மாவட்டம் என பெயர் பெற வேண்டும். 
சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதன் மூலம் காலரா, மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இதன்மூலம் மருத்துவச் செலவு 50 சதவீதம் குறையும் என்றார் அவர். 
இதையடுத்து பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்குள்ள கடைக்காரர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தவறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 
முன்னதாக, சுற்றுலா பயணியர் மாளிகையில் தங்கியிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் 
நிகழ்ச்சிகளில், அரசு கூடுதல் முதன்மைச் செயலர் ஆர்.ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com