மரபணு மாற்ற விதைகளை விற்கத் தடை கோரி மனு

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம், பருத்தி ஆகிய விதை விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை  எடுக்க

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம், பருத்தி ஆகிய விதை விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம்,  கையில் விளக்கேந்தியபடி ஆட்சியரிடம் அளித்த மனு:  
நிகழாண்டு, மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்தியதால் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் படைப்புழுக்கள் தாக்கி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். 
இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிகழாண்டு முதல் மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே விளைவிக்கும் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை. 
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து வகையான விளைபொருள்களுக்கும், கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்து இந்தியாவுக்கே முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் திகழ மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை வேண்டும்.  
வேப்பூர் ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலர் மதியழகன், குன்னம் நகர விவசாயப் பிரிவு செயலர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com