கஜா புயல்: பொன்னமராவதியில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் சேதம்

பொன்னமராவதி வட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 6 ஏக்கர் காய்கறி தோட்டம்,

பொன்னமராவதி வட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 6 ஏக்கர் காய்கறி தோட்டம், 15 ஏக்கர் வாழை தோட்டம், சவுக்கு தோப்பு 1 ஏக்கர், கரும்பு, 15 ஏக்கர், 800 புளியமரங்கள், 460 மாமரம் சேதமடைந்தது. மேலும், 15 ஆடுகள், 1 மாடு உயிரிழந்தன.
பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. பெரும்பாலான மரங்கள் சாலையில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இந்திரா நகர் மற்றும் புதுப்பட்டி, கண்டியாநத்தம் ஆகிய ஊர்களில் வீட்டின் மேல் மரம் விழுந்து வீடு பெரும் சேதத்திற்குள்ளாகியது. வார்ப்பட்டு ஊராட்சி பட்டுப்புஞ்சை தோப்பு பகுதியில்  புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்கள்  பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அந்த மக்களுக்கு அதிமுக ஒன்றிய செயலர் ராம.பழனியாண்டி தலைமையில் அதிமுகவினர் நிவாரணப் பொருள்கள் மற்றும் நிவாரணத்தொகை வழங்கினர்.  மேலும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வெள்ளிக்கிழமையன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. பேருந்து நிலையமே வெறிச்சோடி காணப்பட்டது. 
காரையூர், அரசமலை, மேலத்தானியம், சடையம்பட்டி, ஒலியமங்கலம், அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், மைலாப்பூர், தொட்டியம்பட்டி, இந்திராநகர், வேகுப்பட்டி,கருகப்பூலான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கரும்பு தோட்டம் நாசம் : 
பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
பிடாரம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் ந.சுப்பிரமணியன், ந. பழனியப்பன் ஆகியோர் வயலில் சுமார் 2 ஏக்கர் கரும்பு பயிரிட்டு நன்கு வளர்ந்து இருந்த நிலையில், கஜா புயலால் கரும்புகள் ஒடிந்து தரையோடு சாய்ந்து காணப்படுகிறது. இதேபோல், ஆலவயல் கண்டியாநத்தம் வ.சக்திவேல் என்பவர் சுமார் 1 ஏக்கர் அளவில் பயிரிட்டுருந்த வாழைமரங்கள் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளன. 
முறிந்து கிடக்கும் மின் கம்பங்கள் : கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பொன்னமராவதி வட்டாரத்தில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
      பொன்னமராவதி வட்டாரத்தில் சாலைகள் தோறும் மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. 
மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் முற்றிலும் முடங்கியது. சாலைகளில் கிடந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் மற்றும் இளைஞர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
பொன்னமராவதி கொல்லங்காடு பகுதியில் வீட்டின் மேல் விழுந்த மரத்தை காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து அகற்றினர். கிராமங்களில் சாலைகளில் சாய்ந்த மரங்கள் பொதுமக்களால் வெட்டி அகற்றப்பட்டது.பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர். பாலகிருஷ்ணன்,பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட் ஆகியோர் தலைமையிலான பணியாளர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
பேரூராட்சி சார்பில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர்தொட்டிகளில் நீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com