விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 8 லாரிகள் பறிமுதல் 

விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 8 லாரிகளை வருவாய், காவல் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 8 லாரிகளை வருவாய், காவல் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
விராலிமலை சுற்றுப்பகுதியில் உள்ள வில்லாருடை மற்றும் கோரையாற்றுப் படுகைகளில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் வாகனங்களில் மணல் அள்ளப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக கிடைக்கும் தகவலையடுத்து வருவாய், காவல்துறையினர் அவ்வப்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வில்லாருடை ஆற்றுப் படுகையில் அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரிகள் ரோட்டாத்துப்பட்டி வழியாக வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாலையில் திரண்ட பொதுமக்கள் அவ்வழியே வந்த லாரிகளை சிறைபிடித்து வருவாய், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 
அதன்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, விராலிமலை வட்டாட்சியர் ஆர்.பார்த்திபன், காவல் ஆய்வாளர் அ. மா.செந்தில்மாறன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் சென்றனர். இதையடுத்து மணல் ஏற்றி வந்த 5 லாரியை பறிமுதல் செய்யப்பட்டு விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 
அதேபோல, அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார், செங்கப்பட்டி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதி இன்றி மணல் ஏற்றி சென்றது தெரிய வரவே, லாரியை பறிமுதல் செய்த போலீஸார், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜசேகர்(26), அதேபகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர, புல்வயல் வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.       
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com