நல்ல நூல்களைப் படித்தால் திறந்த மனதோடு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்: எஸ். ராமகிருஷ்ணன்

நல்ல நூல்களைப் படித்தால் திறந்த மனதோடு புதிய வாழ்க்கையைத் தொடங்கி நற்செயல்களை

நல்ல நூல்களைப் படித்தால் திறந்த மனதோடு புதிய வாழ்க்கையைத் தொடங்கி நற்செயல்களை செய்யத் தொடங்கலாம் என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சொற்பொழிவில் "வாழ்க்கை அழைக்கிறது' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரே நேரம்தான் வழங்கப்பட்டிருக்கிறது. பேதமில்லாத சுதந்திரத்தை வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் கடந்த கால அவமானங்கள், புறக்கணிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. வெளியே எத்தனை சந்தோஷமாக இருந்தாலும், மனது அந்தப் புறக்கணிப்புகளை எண்ணி, அந்த அவமானங்களை எண்ணி அழுதுகொண்டே இருக்கிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான கருவிதான் கல்வி. ஆனால், தூங்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். அறிவுரைகளை மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். ஆனால் ஒருபோதும் அறிவுரைகளைக் கேட்க முற்படுவதில்லை. அனுபவம்தான் அறிவுரையாக வருகிறது. 
நாம் நம்முடைய பெரியோர்களுக்கு அளித்த மரியாதைதான் நமக்கு திரும்பக் கிடைக்கப் போகிறது என்பதை உணர வேண்டும். இலக்கியம் இந்த பயத்தைச் சொல்லித் தருகிறது. அனைத்து துயரங்களையும், வலியையும் எழுத்தாளர்கள்தான் பாதுகாக்கிறார்கள். வரும் தலைமுறைக்கு அந்த வலியையும் துயரத்தையும் அனுபவங்களாகத் தருகிறார்கள்.
வெளியே விளக்குகளை ஏற்றி வைத்துக் கொள்கிறோம். ஆனால் மனம் அதே இருளில்தான் இருக்கிறது. அதே வெறுப்புணர்வோடும் அதே துவேஷத்தோடும்தான் இருக்கிறது. 
அதற்குக் காரணம் நாம் படிப்பது, பார்ப்பது எல்லாமும் தவறானதாகவே இருக்கிறது. உண்மையில் தவறான செயல்கள் வெறும் 10 சதவிகிதம் தான் நடக்கிறது. நல்ல செயல்கள் 90 சதவிகிதம் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்த 10 சதவிகிதத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம், கேட்கிறோம். மிகைப்படுத்தப்படுகிறோம், இல்லாததை நம்புகிறோம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கடைசிக்காலங்கள் நாட்டரசன்கோட்டைக்குச் சென்றால் தெரியும். உலகமே கொண்டாட வேண்டிய அவரது நினைவிடத்தில் யாரோ ஓரிருவர் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த கோட்டைகள் எங்காவது இருக்கிறதா, பாருங்கள். ஆனால், அவர்கள் உருவாக்கிய கோயில்கள், கலைகள் இன்னமும் வாழ்கின்றன. இவை நமக்குச் சொல்வதென்ன? செல்வங்கள் அழிந்து போகலாம், கலைகள் அழியாது என்பதைத்தான் சொல்கின்றன. பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையல்ல, சுற்றுப்புறத்தை நண்பர்களை நேசிப்பதுதான் வாழ்க்கை என்பதை இலக்கியம் சொல்லித் தருகிறது. 
இவற்றையெல்லாம் கடந்து எப்படி செம்மையாக வாழ்வது என்று நீங்கள் கேட்கலாம். நாளை காலையே கூட நாம் புதிய மனிதர்களாக மாற முடியும். பிடித்தமான ஒரு நூலை எடுத்து இன்றிரவு படித்தால், நாளை காலை முதல் நம்மனதிலுள்ள தூசி அகற்றப்பட்டு புதிய நாளைத் தரும். நற்செயலை செய்யத் தொடங்கலாம். திறந்த மனதோடு  நம்முடைய வாழ்க்கையை வாழ முற்படலாம் என்றார் அவர்
நிகழ்ச்சிக்கு டாக்டர் பி. தனசேகரன் தலைமை வகித்தார். எழுத்தாளர் நா. முத்துநிலவன் வரவேற்றார். கவிஞர் சு. பீர்முகம்மது நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com