உச்சம், ஞானம், திடம், உயிர்ப்புதான் பெண்ணின் அடையாளங்கள்!

உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு தான் பெண்ணின் அடையாளங்கள் என்றார் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி.

உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு தான் பெண்ணின் அடையாளங்கள் என்றார் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவில், அவர் மேலும் பேசியது:
இந்த இரவு நேரத்தில் திறந்த வெளியில் பெண் எழுத்தாளராக நான் பேசுவதற்கு இத்தனை ஆண்டுகளாகியிருக்கின்றன.  எல்லாமும் மாறிவிட்டதாகச் சொல்பவர், யானையைத் தொட்டுப் பார்த்து விளக்கமளித்த குருடராகத்தான் இருக்க முடியும். சீதையின் மீதும், கண்ணகியின் மீதும், நளாயினியின் மீதும் வீசிய வார்த்தைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எங்களின் உள்மனதிலுள்ள வலியை, கவலையை, புழுதியை, கண்ணீரை உணர்ந்து கொள்ள, அளப்பதற்கு உங்களிடம் எந்தக் கருவியாவது இருக்கிறதா? பெண்ணியவாதிகள் என்றாலே எட்டி நிற்கிறார்கள். நாங்கள் சமத்துவத்துக்கான போராளிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 
பாரதி கொடுத்த ரெளத்திரத்தைக் கைக்கொண்டால் அதன்பெயர் திமிர் என்கிறீர்கள். உச்சம், ஞானம், திடம், உயிர்ப்புதான் எங்களின் அடையாளம். 
வெளிநாடுகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே சமைக்கிறார்கள். இங்கே இன்னமும் அது மாறவில்லை. உரிமை, சமத்துவம் என்று பேசுவதற்கு முன்பு, வீட்டிலுள்ள ஆண்களுக்குச் சொல்லித் தாருங்கள். நாங்கள் ஏதோ மாயாஜாலம் செய்பவர்கள் அல்லர். ரத்தமும் சதையும், வலியும் வேதனையும் கலந்த மனிதப் பிறவிகள்தான். பெண்கள் எப்போதும் யாராவது பாராட்டுவார்கள், வாழ்த்துவார்கள் என்று இனியும் காத்திருக்க வேண்டாம். நமக்கு நாமே அட்சதைகளைத் தூவிக் கொள்வோம் என்றார் அவர். 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா புத்தகங்கள் புதுவிதமான அனுபவங்களைத் தந்து பண்படுத்துகின்றன என்றார்.
புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி முழுவதும் பெண்கள் அமர்வாகவே அமைக்கப்பட்டிருந்தது. மஹாராணி ரோட்டரி சங்கத்தின் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, கவிதா ராஜசேகரன், பேச்சாளர் பாரதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் டி. சலோமி, அம்பிகா கல்வி அறக்கட்டளை சந்திரா ரவீந்திரன் உள்ளிட்டோரும் பேசினர்.
மு. கீதா வரவேற்றார். க. உஷா நந்தினி நன்றி கூறினார். த. ரேவதி தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com