தமிழின் கதையை இனிமேல்தான் எழுதத் தொடங்க வேண்டும்

தமிழின் கதையை இனிமேல்தான் எழுதத் தொடங்க வேண்டும், காரணம் நவீன  ஆய்வுகள் இன்னும் புதிய தகவல்களை

தமிழின் கதையை இனிமேல்தான் எழுதத் தொடங்க வேண்டும், காரணம் நவீன  ஆய்வுகள் இன்னும் புதிய தகவல்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கின்றன என்றார் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவில், தமிழின் கதை என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி நாகரீகத்தில் கிடைத்த சீப்புதான் இன்றைக்கும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே, காலம் காலமாக நம்முள் பழகிப்போன எழுத்தும், வாசிப்பும் நம்மைவிட்டு ஒரு போதும் அகலாதது. தன்னைப் பற்றியும் தன் முன்னோர்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான மிக முக்கியமான கருவி அது.
இந்தியாவின் வரலாற்றை எந்தக் காலத்தில் இருந்து குறிப்பிடுகிறார்களோ அப்போதே சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேனிமாவட்டம் புள்ளிமான்கோம்பை  கிராமத்தில் கிடைத்த நடுகல் ஒன்றில், மாடுகளைக் களவாடிச் சென்ற கூட்டத்தை விரட்டியடித்தபோது இறந்த அந்துவன் என்ற வீரனின் பெயர் குறிப்பிடப்பட்டிக்கிறது. அசோகனின் பெயர் கல்வெட்டில் அறியக் கிடைப்பது அரிய செய்தியல்ல, ஒரு சாதாரண கிராமத்து வீரனின் பெயர் எழுதக் கிடைத்திருப்பதுதான் அரியது.  இந்த நடுகல்லும் அசோகனுடைய காலத்துக்கும் 150 ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள்.
கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 139 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. வெறும் பானை ஓடுகள் அல்ல, பெயர் எழுதப்பட்ட பானை ஓடுகள். இதன் மூலம் நம்முடைய தொன்மையை மட்டுமல்ல, எழுத்தறிவையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கீழடியில் ஆப்கானிஸ்தானின் மணி,  ரோம் நகரின் பாத்திரங்கள், சீசர் சர் காலத்து நாணயங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. தந்தத்தில் தண்டட்டியும், தாயமும் செய்திருக்கிறார்கள். இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடமிருந்த வணிகத் தொடர்பை விளக்குகின்றன. இலக்கியத்தை தனது சொந்த மொழியிலேயே படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்ற மூன்று பிரதான இனம், ஒன்று கிரேக்கம், அடுத்து சீனம், மூன்றாவதாக தமிழ்.
 சென்னையின் ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்கோடாரி கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் இந்தியப் பகுதிகளுக்கு வந்ததாகச் சொல்லப்படுவதே 1.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். எனவே, தமிழின் கதை எங்கே தொடங்குகிறது என்றால், அந்தக் கதையை இனிமேல்தான் எழுத வேண்டும். ஆய்வுகள் இதைத்தான் நமக்குச் சொல்கின்றன. அதற்காக இதுவரை வந்த ஆய்வுகளை, முடிவுகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை என்றார் வெங்கடேசன்.
முன்னதாக அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா சிறப்புரை நிகழ்த்தினார். டி. பெனட் அந்தோனிராஜ் தலைமை வகித்தார். நிகழ்வை தங்கம் முர்த்தி தொகுத்தளித்தார். முன்னதாக, கும. திருப்பதி வரவேற்றார்.  நிறைவில் துரை. நாராயணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com