தஞ்சாவூர் மாவட்டத்தில்புயலால் இருளில் மூழ்கிக் கிடக்கும் கிராமங்கள்

கஜா புயலால் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

கஜா புயலால் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
கஜா புயலால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதேபோல, 8,748 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், 200 கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. மேலும், 15 மின் மாற்றிகளும், பட்டுக்கோட்டையில் ஒரு துணை மின் நிலையமும் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் 100 சதவீதமும், தஞ்சை நகரில் 65 சதவீமும், பேரூராட்சி, கிராமங்களில் 20 சதவீதமும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
ஆனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 80 சதவீத கிராமங்களுக்கு மூன்று நாட்களாக மின்சாரம் கிடைக்கவில்லை. எனவே, இக்கிராமங்கள் இரவு நேரத்தில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இரவில் சாலையில் செல்வதற்கு வழி தெரியாமல் தடுமாறுவது மட்டுமல்லாமல், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
பகலிலும் கிரைண்டர், மிக்சி இயக்க முடியாததால், உணவும் தயாரிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குக் குடிநீரை ஏற்றுவதற்கு மின்சாரம் இல்லாததால் மோட்டாரை இயக்க முடியவில்லை. எனவே, சில கிராமங்களில் மக்களே செலவு செய்து டீசல் மோட்டாரை வாடகைக்குப் பெற்று நீரேற்றுகின்றனர்.
ஆனால், ஒரே நேரத்தில் பல கிராமங்களுக்கும் டீசல் மோட்டார் தேவைப்படுவதால், பற்றாக்குறைக் காரணமாகப் பெற முடியவில்லை. இதன் காரணமாகவும் நீரேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். டீசல் மோட்டார் மூலம் நீரேற்றினாலும், மக்களுக்குக் குடிநீர் முழுமையாகக் கிடைப்பதில்லை.
இதனால், சில கிராமங்களில் குளத்தில் தேங்கிக் கிடக்கும் நீரை சேகரித்து குடித்து வருகின்றனர். எனவே, நோய் பாதிக்கும் என்ற அச்சத்திலும் கிராம மக்கள் உள்ளனர்.
புயல் வீசி மூன்று நாட்கள் கடந்த பிறகும் கிராமங்களில் சாய்ந்த மின் கம்பங்களும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளும் அதே நிலையில் தொடர்கின்றன. எனவே, தெருக்களைக் கடந்து செல்வதற்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மின் விநியோகத்தைச் சீர் செய்வதற்காக வெளி மாவட்டத் தொழிலாளர்கள் உள்பட 1,180 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும், புதிதாக 9,000 மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதுவரை 241 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவினரும் 5 மின் கம்பங்களை நடுவதற்கு ஒரு நாளாகிறது. அனைத்துப் பகுதிகளிலும் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், இவற்றைச் சீரமைக்கக் குறைந்தது ஒரு வாரத்துக்கு மேலாகும் என்றும், முழுமையாகச் சீரமைக்க 20 நாட்களாகும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிராமச் சாலைகள் துண்டிப்பு: மாவட்டத்தில் முதன்மைச் சாலைகளில் உள்ள மரங்கள் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கிராமங்களில் உள்ள பிரதான சாலைகளிலும் சாய்ந்து கிடந்த மரங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. இதில், அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களே முயற்சி செய்து அகற்றியுள்ளனர்.
ஆனால், தெருக்களிலும், குக்கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் விழுந்த மரங்களை அகற்ற முடியாமல் தவிக்கின்றனர். பெரும்பாலும் பெரு மரங்களாக இருப்பதால், அவற்றை ஆட்களால் அகற்ற முடியவில்லை. அவற்றை அறுப்பதற்கு இயந்திர ரம்பம் தேவைப்படுகிறது. இவையும் கிடைக்காததால் பல குக்கிராமங்களில் மரங்களை அப்புறப்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்குக் குக்கிராமச் சாலைகள் உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் யாரிடம் கூறுவது எனத் தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். பணியாளர்களும் போதிய அளவில் இல்லாததால், சீரமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com