நிலைகுலைந்த பேராவூரணி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதி முழுவதும் கஜா புயலின் தாக்கத்தால் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதி முழுவதும் கஜா புயலின் தாக்கத்தால் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை இரவு வீசிய கஜா புயல் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 111 கி.மீ. வேகத்தில் வீசியது.
இதனால் பேராவூரணி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளிலும்,
சாலையோரங்களிலும் சாய்ந்து விழுந்தன.
போக்குவரத்து பாதிப்பு...: மரங்கள் விழுந்ததாலும், புயலின் தாக்கத்தாலும் அப்பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மின்வயர்கள் கடுமையாக சேதமடைந்தன. மேலும், சில பகுதிகளில் சாலைகளும் சேதமடைந்ததால், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏதும் கடந்த 3 நாள்களாக இயக்கப்படவில்லை. மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு...: புயலின் தாக்கத்தை ஒட்டி சேதமடைந்த பல்வேறு மின்கம்பங்கள், மின்வயர்களை சீரமைக்க வெறும் ஆயத்தப் பணிகள் மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் செய்யப்படவில்லை. மின்விநியோகத்தை சீரமைக்க குறைந்தது ஒரு வாரம் ஆகும் எனத் தெரிகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் கடந்த 3 நாள்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
படகுகள் சேதம்...: சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கஜா புயலில் 32 மீனவ கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட விசை படகுகள், 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் ஒன்றோடொன்று மோதியதில் கடுமையாகச் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வளவு சேதம் ஏற்பட்டும், அதனைப் பார்வையிடவோ, மீட்புப் பணிகளில் ஈடுபடவோ, நிவாரணம் வழங்கவோ அரசு நிர்வாகம் முன்வராமல் மெத்தனமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகளும், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் போதுமான அளவில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com