தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி: முதல்வர் வழங்கினார்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
புதுக்கோட்டையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பட்டுக்கோட்டைக்கு வந்த முதல்வர்,  சூரப்பள்ளம் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புக்குச் சென்று சாய்ந்து கிடந்த மரங்களை பார்வையிட்டார்.  அவரிடம், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி. சேகர் உள்ளிட்டோர் பாதிப்பு விவரங்களை எடுத்துக் கூறினர்.
பின்னர், புயலால் சுவர் இடிந்து இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், சேதமடைந்த கூரை வீடுகளின் பயனாளிகள் 5 பேருக்கு தலா 10, 000 ரூபாயும் நிவாரணம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அரசுத் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கத்தை அழைத்து பாதிப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். 
முதல்வரிடம், புயலால் மக்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்துள்ளது. எனவே, கூடுதலாக உதவிகள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல. விழுந்து கிடக்கும் மரங்களையும் விவசாயிகளால் அப்புறப்படுத்த இயலாது. அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். இதேபோல, இடிந்த வீடுகளுக்கான நிவாரணமும் போதாது. மின் விநியோகம் செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் துரைமாணிக்கம்.
புதுக்கோட்டையில் ரூ. 51.34 லட்சம் நிவாரண உதவிகள்:  முன்னதாக,  புதுக்கோட்டை வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர்  மாப்பிள்ளையார்குளம்,  மச்சுவாடி ஆகிய பகுதிகளில் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டனர். அதைதொடர்ந்து, புயலால்  உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 50 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். மேலும், முழுமையாக சேதமடைந்த 4 வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம், பகுதி சேதமடைந்த 23 வீடுகளுக்கு தலா ரூ. 4,100 என மொத்தம் ரூ. 51.34 லட்சம் வழங்கப்பட்டது.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள30 பேருக்கு விலையில்லா சேலைகள், வேட்டிகள் மற்றும் தலா 10 கிலோ அரிசியை முதல்வர் வழங்கினார்.
அப்போது,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கதர் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன்,  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து,  எம்பிக்கள் ப. குமார், பி.ஆர். செந்தில்நாதன், எம்எல்ஏ பா. ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர்களான அரசுச் செயலர்கள் சுனில்பாலிவால், ஷம்பு கல்லோலிகர், எம்.எஸ். சண்முகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர், ஆட்சியர் சு. கணேஷ் ஆகியோரும் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com