தஞ்சை மாவட்டத்தில் மழை: மீட்புப் பணிகள் பாதிப்பு: மக்கள் தவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது மழை பெய்வதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது மழை பெய்வதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் இடைவெளி விட்டு விட்டு சற்று பலத்த மழையும் பெய்தது. எனவே, மாவட்டத்தில் மீட்புப் பணிகள் திங்கள்கிழமை முதல் முழு வீச்சில் தொடங்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் தொய்வு ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பங்களுக்குப் பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைத்தல், மின் கம்பிகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. சாலையில் விழுந்த பெரு மரங்களை அகற்றும் பணியும் மழையால் முடிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால், கிராமங்களில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளைச் சுற்றி விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் மழை காரணமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இடிந்த வீடுகளைச் சீரமைக்கும் பணியும் தள்ளிப்போகிறது. இதேபோல, கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளும் அலுவலர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
ஏற்கெனவே, கஜா புயலால் சேதமடைந்த வீடுகளில் மழையின் காரணமாக ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராம மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் செவ்வாய்க்கிழமை தஞ்சம் புகுந்தனர். நிவாரண முகாம்களுக்குச் செல்ல முடியாத மக்கள் ஒழுகிய வீட்டிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அணைக்கரையில் 40 மி.மீ. மழை: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
கும்பகோணம் 20, வெட்டிக்காடு, திருக்காட்டுப்பள்ளி தலா 14.6, அய்யம்பேட்டை, வல்லம் தலா 14, அதிராம்பட்டினம் 12.8, தஞ்சாவூர், கல்லணை தலா 11.6, திருவிடைமருதூர் 11.30, நெய்வாசல் தென்பாதி 10.4, திருவையாறு 10, பாபநாசம் 8.4, ஒரத்தநாடு, மதுக்கூர் தலா 8, பூதலூர் 7.6, பட்டுக்கோட்டை 6.7, ஈச்சன்விடுதி 6.5, மஞ்சலாறு 3.8, பேராவூரணி 3.2, அணைக்கரை 3, குருங்குளம் 2. 
மேலும், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 40, குருங்குளம் 31, கும்பகோணம் 25, அய்யம்பேட்டை 27, நெய்வாசல் தென்பாதி 14.6, தஞ்சாவூர் 13.2, ஒரத்தநாடு 13.1, ஈச்சன்விடுதி 10.2, வெட்டிக்காடு 9.8, மதுக்கூர் 9.4,  பட்டுக்கோட்டை 8.3, பேராவூரணி, திருவிடைமருதூர் தலா 8.2, மஞ்சலாறு 8, திருக்காட்டுப்பள்ளி 7.2, திருவையாறு 7, வல்லம், பூதலூர் தலா 6, அதிராம்பட்டினம் 5.8, பாபநாசம் 4.1.
நிவாரண நடவடிக்கையை விரைவுபடுத்த வலியுறுத்தல்:
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் தெரிவித்திருப்பது:
டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 நாட்களாக மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, உணவு இல்லை, கொசுக் கடியால் உறக்கம் இல்லை. கழிப்பறைக்குக்கூட தண்ணீர் இல்லை. விழுந்த பல லட்சம் மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. முழுமையாகச் சரி செய்ய எத்தனை நாட்களாகும் என்பது தெரியவில்லை. அடுத்தடுத்து மழை வரும் என வானிலை எச்சரிக்கிறது.
வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக அகதிகள் போல் குடிநீருக்கும் உணவுக்கும் நடு ரோட்டில் நின்று கதறுகின்றனர். இதுவரை எங்கள் கிராமத்துக்கு எந்த அலுவலரும் வரவில்லை என்ற அழுகுரல் எங்கும் கேட்கிறது.
முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம், யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்றதுதான். முழுமையாகச் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ. 10,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் நாசமாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான சிறு வணிகர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். 
எனவே, தமிழக அரசு முறையான, முழுமையான, விரைவான நிவாரண நடவடிக்கைகளை உள்ளூர் மக்களின் கருத்துக்களைக் கேட்டு மேற்கொள்ள வேண்டும் என காளியப்பன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com