பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் கருவூலம் நிரம்புகிறது: டி.ஆர்.பாலு பேச்சு

பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசின் கருவூலம் நிரம்புகிறது என்றார் திமுக முதன்மைச் செயலர் டி.ஆர். பாலு.

பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசின் கருவூலம் நிரம்புகிறது என்றார் திமுக முதன்மைச் செயலர் டி.ஆர். பாலு.
ஊழல் காரணமாகத் தமிழக அரசுப் பதவி விலகக் கோரியும், ஊழல் செய்த அமைச்சர்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் 2014 ஆம் ஆண்டில் கலால் வரி மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ. 9,918 கோடி. இது, 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 2.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வளவு வருவாய் கிடைத்தாலும், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது. 
பெட்ரோல், டீசல் விலை உயர, உயர விலைவாசியும் உயரும். மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் வரி மீதான கலால் வரியைத் தவிர்க்கலாம். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு முன்வருவதில்லை. 
 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை கலால் வரியை பாஜக அரசு உயர்த்தியுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் வரி மூலம் மத்திய அரசின் கருவூலம் (கஜானா) நிரம்புகிறது.
சாமானிய மக்கள் மீது வரியைத் திணிப்பதால் ஏழைகள் தவிக்கின்றனர். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பெரு நிறுவனங்களுக்கு 36 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது இப்போது 28 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு அல்லாமல், பணக்காரர்களுக்கான அரசாக இருக்கிறது.
இதேபோல, தமிழக அரசு தூர் வாரும் பணிக்காக ரூ. 4,735 கோடி ஒதுக்கீடு செய்தது. அது என்ன ஆனது என்பதே தெரியவில்லை. தூர் வாரியதாக அரசுக் கூறுகிறது. அப்படியென்றால் கடைமடைப்பகுதிக்கு ஏன் தண்ணீர் செல்லவில்லை என்றார் பாலு. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். திமுக தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல். கணேசன், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையார், பி.ஜி. ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன்,  திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலர் ச. சொக்கா ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எஸ்.எம். ஜெய்னுலாவுதீன், மனித நேய மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஐ.எம். பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com