இரட்டை மடி வலைகளைப் பறிமுதல் செய்ய மீனவர்கள் வலியுறுத்தல்

விசைப் படகுகளில் பயன்படுத்தப்படும் இரட்டை மடி வலைகளைப் பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நாட்டுப் படகு மீனவர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


விசைப் படகுகளில் பயன்படுத்தப்படும் இரட்டை மடி வலைகளைப் பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நாட்டுப் படகு மீனவர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் அச்சங்கத்தின் தலைவர் ஏ.ஜெயபால் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்தப் பேட்டி: தஞ்சாவூர் மாவட்டத்தில் 34 மீனவக் கிராமங்களில் ஏறத்தாழ 30,000 பேர் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 20,000 பேர் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.
அதேவேளையில், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் கிராமங்களில் சுமார் 200 பேர் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கின்றனர். இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருகின்றனர்.
நாட்டுப் படகு மீனவர்கள் ஓராண்டில் ஈட்டக்கூடிய வருவாயை விசைப் படகு மீனவர்கள் இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி ஒரே நாளில் ஈட்டுகின்றனர். அதேசமயம் கடல் வளம் அழிக்கப்படுவதால், நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர், இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இரட்டை மடி வலையைப் பயன்படுத்தும் போது, அதில் மீன் குஞ்சுகள், சிசுக்கள் உள்பட அனைத்தும் அள்ளிக் கொண்டு வருவதால், மீன் வளம் உள்ளிட்ட எல்லா வளங்களும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுகின்றன. இதனால், கடலில் மீன் வளம் பெருகுவதில்லை.
இப்பிரச்னை தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரைக் கிராமங்களில் உள்ளன. மேலும், விசைப்படகு மீனவர்கள் எல்லைக் கடந்து சென்று மீன் பிடிக்கின்றனர். ஆனால், நாட்டுப் படகு மீனவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. இதனால்தான் இந்தியா - இலங்கை இடையே பிரச்னை நிலவுகிறது.
எனவே, இரட்டை மடி வலைகளைப் பறிமுதல் செய்து இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றார் அவர். பேட்டியின்போது, செயலர் வை.பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com