ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக சார்பில் 127 ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் 127 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தெற்கு மாவட்டச் செயலரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் தலைமை வகித்தார்.
இதில், துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி பேசியது:
ஒவ்வொரு அதிமுக தொண்டருக்கும் இந்த இயக்கம் சொந்தமானது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு மிகப் பெரிய வெற்றிடமும், குழப்பமும் ஏற்பட்டது. இந்தக் கட்சியையும், ஆட்சியையும் யார் வழி நடத்துவது என்ற குழப்பம் நிலவியபோது ஜெயலலிதா தலைமையேற்ற பிறகு தீர்வு கிடைத்தது.
அதேபோன்ற வெற்றிடமும், குழப்பமும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டது. ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற ஒரு கூட்டம் முயற்சி செய்தது. அதை முறியடிப்பதற்கு முதல் முதலில் குரல் கொடுத்தவர் வைத்திலிங்கம். இந்த இயக்கத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களின் செயலை முறியடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார் முனுசாமி.
அதிமுக அமைப்புச் செயலரும், மின் துறை அமைச்சருமான பி. தங்கமணி பேசியது: 
இந்த இயக்கத்தில்தான் சாதாரண தொண்டரும் உயர்ந்த நிலையை அடைய முடியும். அவ்வாறே எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்துகிற தேர்தலாக அமைய வேண்டும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் இத்தேர்தலில் பாடம் புகட்டினால், இந்த இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்றார் அவர்.
அதிமுக அமைப்புச் செயலர் நத்தம் இரா. விசுவநாதன் பேசியது:
இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தனது பிறந்த நாளில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என ஜெயலலிதா கூறுவார். அவருடைய கனவை இந்த இயக்கம் நிறைவேற்றி வருகிறது என்றார் அவர்.
முன்னதாக, 127 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஒவ்வொரு மணமக்களுக்கும் 4 கிராம் தங்கத் தாலி, பட்டுச் சேலை, பட்டு வேட்டி, சட்டை, சில்வர் பாத்திரங்கள், கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, மின் விசிறி, இரு குத்துவிளக்குகள், பூஜை பொருள்கள் என 72 வகையான சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர்கள் இரா. காமராஜ் (உணவுத் துறை), இரா. துரைக்கண்ணு (வேளாண்மைத் துறை), சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், தமிழ்நாடு அரசுத் தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன், ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், சி.வி. சேகர், மா. கோவிந்தராசு, ஜே.கே.என். ராமஜெயலிங்கம், இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுக தெற்கு மாவட்ட வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த என். மனோகரன், அய்யா. வெற்றிச்செல்வன், வி. பொற்செழியன், கே. ரமேஷ், எம். குமரவேல், பரம. சந்திரசேகரன், ஆர். சதீஷ்குமார், எஸ். தேன்மொழி, அரியலூர் எஸ்.வி. சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
திருமணம் முடிந்ததும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு வடை, பாயாசத்துடன் கூடிய விருந்து நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com