கூலிப் படையினரிடம் பறிமுதல் செய்த வாகனத்தை பயன்படுத்திய எஸ்.எஸ்.ஐ.யிடம் விசாரணை

கூலிப் படையினரிடம் பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்த ஒரத்தநாடு சிறப்புப் பிரிவு

கூலிப் படையினரிடம் பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்த ஒரத்தநாடு சிறப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு காவல் நிலையத்தில் எஸ்.பி. சிறப்புப் பிரிவு உதவி காவல் ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) இளங்கோவன் (46).  இவர் கடந்த 11 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில்,  இளங்கோவன்,  கூலிப்படையினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருவதாக டி.ஐ.ஜி. லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திங்கள்கிழமை ஆய்வாளர் பிரபாகரன்,  உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார்,   ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு சென்று பணியில் இருந்த இளங்கோவனிடம் விசாரணை மேற்கொண்டனர். 
இதில், கூலிப்படையினர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வைத்திருந்ததை எஸ்.எஸ்.ஐ. இளங்கோவன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அந்த வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்த  வாகனத்தில் போலீஸ் என்று பொறித்தும், தனது மகள் பெயரையும் எழுதி இளங்கோவன் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து,  எஸ்.பி. சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடத்திலிருந்து இளங்கோவன் விடுவிக்கப்பட்டு, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னணி:  2018,  ஜூலையில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொன்முடி உதவியாளர் கொலை வழக்கில் தேடப்பட்ட கூலிப்படையை சேர்ந்த 7 பேர் ஒரத்தநாடு அருகே உள்ள தேவபுரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸார்,  அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது, 3 பேர் தப்பியோடிவிட்டனர். எஞ்சிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும்,  அவர்களிடமிருந்து பல்சர் இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றி கடந்த 5 மாதங்களாக எஸ்.எஸ்.ஐ. இளங்கோவன் பயன்படுத்தி வந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com